மகராஷ்டிரா தேர்தல்: ஹாட்ரிக் வெற்றி பெரும் கேப்டன் தமிழ்செல்வன்

மும்பையின் சியோன்- கோலிவாடா தொகுதியில் தமிழகத்தை சேர்ந்த கேப்டன் தமிழ்செல்வன் முன்னிலை வகித்து ஹாட்ரிக் வெற்றியை பெறவுள்ளார்.

Nov 24, 2024 - 06:33
Nov 24, 2024 - 06:34
 0
மகராஷ்டிரா தேர்தல்: ஹாட்ரிக் வெற்றி பெரும் கேப்டன் தமிழ்செல்வன்
மகராஷ்டிரா தேர்தல்: ஹாட்ரிக் வெற்றி பெரும் கேப்டன் தமிழ்செல்வன்

288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா சட்டசபைத் தேர்தல் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில்  தமிழர்கள் அதிகம் வசிக்கும் சியோன் -கோலிவாடா தொகுதியில் பாஜக வேட்பாளராக கேப்டன் தமிழ்செல்வனும், காங்கிரஸ் வேட்பாளராக கணேஷ் குமார் யாதவும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 11-வது சுற்று முடிவில் கேப்டன் தமிழ்செல்வன்  50,060 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கணேஷ் குமார் யாதவ் 36,244 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். 

சயான்- கோலிவாடா தொகுதி, காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் நேரடியாக மோதும் தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கணேஷ் குமார் யாதவும், பாஜக சார்பில் போட்டியிடும் தமிழ் செல்வனும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் இரு தமிழர்கள் மோதிக் கொள்வது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் துபாயில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறிய ஏஜெண்ட் ஒருவரை நம்பி மும்பைக்கு வந்துள்ளார். ஆனால், அந்த ஏஜெண்ட் மும்பை விமான நிலையத்தில் தமிழ்செல்வனை விட்டுச் சென்றதால் மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல விரும்பாத அவர் கூலித்தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். 

பின்னர் படிப்படியாக உயர்ந்து, தாராவி உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மக்களுக்கு உதவத் தொடங்கினார். இவரின் உதவி செய்யும் குணத்திற்காக மும்பை வாழ் தமிழர்கள் இவரை கேப்டன்' தமிழ்ச்செல்வன் என்று அழைக்கிறார்கள். உலகத் தமிழர் கூட்டமைப்பின் மாநில தலைவர் பதவியில் இருந்த தமிழ்செல்வன், மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் பணியாற்றி உள்ளார். 

பின்னர் பாஜகவில் இணைந்த தமிழ்செல்வனுக்கு 2014-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சயான் - கோலிவாடா தொகுதி சீட் வழங்கப்பட்டது. அதில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார். மீண்டும் 2019-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் சயான் - கோலிவாடா தொகுதியில் வென்று பாஜக எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். தற்போது அதே தொகுதியில் போட்டியிடும் தமிழ்செல்வன், காங்கிரஸ் வேட்பாளரை விட 13,816 வாக்குகள் அதிகம் பெற்று ஹாட்ரிக் வெற்றியை பெற இருக்கிறார். 

சயான்- கோலிவாடா தொகுதியில் 3-வது முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட இருக்கும் கேப்டன் தமிழ்செல்வன், இந்த முறை மகராஷ்டிரா அமைச்சரவையில் இடம் பிடிப்பார் எனக் கூறப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow