ArvindKejriwal: ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால்... கொட்டும் மழையில் தொண்டர்கள் கொண்டாட்டம்!
மதுபான கொள்கை முறைகேடு கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியின் முதலமைச்சராக பொறுப்பு வகித்து வந்த அவரை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. முன்னதாக இந்த வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லியின் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பின்னர் மக்களவைத் தோ்தல் பிரசாரத்திற்காக பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. 21 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால், மீண்டும் சிறைக்குச் சென்றார். இதுதொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மேலும் அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது. அப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அதன் பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வரமுடியவில்லை, ஜாமீன் கிடைப்பதிலும் சிக்கல் இருந்தது.
இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி உள்பட ஆம் ஆத்மி கட்சியினர் மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். மத்திய அரசு பழிவங்கும் நோக்கில் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் அவரை கைது செய்வதாக கூறினர். அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவால் தனது உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் கேட்ட நிலையில், அதற்கும் சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் இருந்து தொடச்சியாக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பலனாக, அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
இதனையடுத்து தற்போது திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அவரது வருகையை எதிர்பார்த்து கொட்டும் மழையிலும் ஆம் ஆத்மி தொண்டர்கள் காத்திருந்தனர். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியேறியதும் உற்சாகமாக முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், மழையில் ஆடிப்பாடி கொண்டாடினர். அப்போது ஆம் ஆத்மி தொண்டர்கள் முன்னிலையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் வைத்து என்னை ஒடுக்க நினைத்தனர், ஆனால் நான் முன்பை விட 100 மடங்கு வலிமையோடு உள்ளேன் என பேசினார். அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.10 லட்சம் பிணைத்தொகை கட்ட வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?