கொல்கத்தாவில் கடந்த மாதம் (செப்) 9 ஆம் தேதி அன்று தனியார் மருத்துவக்கல்லூரி வளாகத்தின் உள்ளேயே பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
‘மாநில சுகாதார துறை செயலர் என்.எஸ்.நிகாமை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்பன உட்பட 9 கோரிக்கைகளை முன்வைத்து, இளநிலை மருத்துவர்கள் 6 பேர் கடந்த 5-ம் தேதி தொடங்கி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 50க்கும் அதிகமான மூத்த மருத்துவர்கள் அண்மையில் தங்களது பணியை ராஜினாமா செய்தனர். அவர்களை மருத்துவ மாணவர்கள் உற்சாகமாக கைதட்டி கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். இந்த காணொளி இணையத்தில் வைரலாகியது. மூத்த மருத்துவர்களின் இந்த ராஜினாமா நாடு முழுவதும் பேசு பொருளாகியது.
இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் மருத்துவர்களிடம் நேற்று (அக். 19) தொலைபேசி மூலம் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “மாநில சுகாதாரத் துறை செயலர் நாராயண் ஸ்வரூப் நிகாமை நான் ஏன் நீக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு துறையில் உள்ள அனைவரையும் ஒரே நேரத்தில் நீக்க முடியாது. ஒரு அதிகாரி நீக்கப்படுவதை நீங்கள் எப்படி முடிவு செய்யலாம்? இது தர்க்க ரீதியானதா? நாங்கள் ஏற்கனவே காவல் துறை ஆணையர் (CP), மருத்துவக் கல்வி இயக்குநர் (DME) மற்றும் சுகாதார சேவைகள் இயக்குநர் (DHS) ஆகியோரை நீக்கியுள்ளோம். ஆனால் அந்தத் துறையில் உள்ள அனைவரையும் என்னால் நீக்க முடியாது.
உங்கள் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை அரசு நிறைவேற்றும். சிலவற்றுக்கு கொள்கை முடிவுகள் தேவை. நாங்கள் முழு அளவில் ஒத்துழைப்போம். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அரசுக்கு ஆணையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்கள் சிகிச்சைக்காக உங்களை நம்பி இருக்கிறார்கள். ஏழைகள் எங்கே போவார்கள்? தயவுசெய்து என் பதவியை மறந்து என்னை உங்கள் சகோதரியாக நடத்துங்கள். மருத்துவ மாணவி கொலை வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்து வருகிறது. சிபிஐ உங்களுக்கு நீதி வழங்கும் என்று நம்புகிறேன். மாணவர் தேர்தலை நடத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் அவகாசம் கொடுங்கள்.
மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் உங்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறேன். எனக்கு எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது சுகாதார சேவைகளை பாதிக்கக் கூடாது. நான். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.