இந்திய அரசியல் 2024: மோடி 3.0 டூ அம்பேத்கர் சர்ச்சை வரை...

மோடி 3.0, உயிர்பெற்ற எதிர்க்கட்சிகள், அதிகரித்த வாரிசுகள், எதிர்பாரா தேர்தல் தோல்விகள் என அரசியல் களத்தில் பல டிவிஸ்ட் & டர்ன்ஸ் நிகழ்வுகள் அரங்கேறிய ஆண்டாக 2024 இருந்தது... அப்படி 2024ல் அரங்கேறிய முக்கிய அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பை காணலாம்..!

Dec 31, 2024 - 17:32
Dec 31, 2024 - 18:07
 0
இந்திய அரசியல் 2024: மோடி 3.0 டூ அம்பேத்கர் சர்ச்சை வரை...

இந்திய அரசியலில் 2024 ஆம் ஆண்டை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சிக்கான ஆண்டு என்று தான் கூற வேண்டும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி அரசு, 2024 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியை பிடித்தது. மத்தியில் பிரதமர் மோடி தொடர்ந்து 3 ஆவது முறையாக ஆட்சி அமைத்தார். மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சியின் கையே ஓங்கி இருந்நது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட பாதயாத்திரை அக்கட்சிக்கு சற்று வலு சேர்த்தது என்றே கூற வேண்டும். இதுவே காங்கிரஸ் கட்சியை வலுவான எதிர்க்கட்சியாக அமர வைத்தது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து. 

1.    ஜனவரி 14ல் பாரத் ஜோடா நியாய யாத்ராவின் இரண்டாம் கட்ட நடைபயணத்தை மணிப்பூர் இம்பாலில் இருந்து தொடங்கினார் ராகுல்காந்தி. 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மார்ச் 17 ஆம் தேதி இந்த நடைபயணம் முடிவுற்றது. 

2.    இண்டியா கூட்டணி உருவாக காரணியாக இருந்த நிதிஷ் குமார், திடீரென தன் முடிவை மாற்றிக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்ததோடு, பீகார் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  

3.    சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.

4.    பிப்ரவரி 27ல் நடந்த 65 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 32 இடங்களை கைப்பற்றியது.  

5.    மக்களைவைத் தொகுதி எம்.பி.யாக இருந்த சோனியா காந்தி, முதன்முறையாக ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் ஏப்ரல் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவரது இடத்திற்கு சோனியா காந்தி பதவி ஏற்றுக் கொண்டார்.

6.    18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி கணக்கிடப்பட்டன. 

7.    கடந்தமுறை நின்ற வாரணாசி தொகுதியிலேயே பிரதமர் நரேந்திர மோடி  போட்டியிட்டிருந்தார். ஆனால், ராகுல்காந்தியோ 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்ததால், இம்முறை ரேபரேலி மற்றும் வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். 

8.    ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாராவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, மன்மோகன் சிங் அரசு ‘சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு’ என்று சொன்னதைப் போல காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இருப்பதாக கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.  

9.    அதேபோல், "ஜெகநாதர் ஆலய கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். இதை தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்?” என்று ஒடிசா மாநில தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கூறியது தமிழர்களை இழிவுப்படுத்தும் செயல் என்றுக்கூறி எதிர்க்கட்சியினர் கண்டனங்களை எழுப்பினர். 

10.    கேரளாவில் தேர்தல் பிரசாரத்தின் போது அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குறித்து ராகுல் காந்தி சொன்ன கருத்துக்கு பதிலடி தந்த இடதுசாரி ஜனநாயக முன்னணியின் எம்.எல்.ஏவான பி.வி. அன்வர், "ராகுல் காந்தி உண்மையில் நேரு-காந்தி குடும்பத்தில் பிறந்தவரா என மரபணு சோதனை செய்ய வேண்டும்," என்று விமர்சித்தது சர்ச்சையானது. 

11.    நந்தியாலா சட்டமன்ற தொகுதியில் தனது நண்பரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான ரவீந்திர கிஷோர் நடிகர் அல்லு அர்ஜூன் வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அதோடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு அல்லு அர்ஜூன் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டதால் அவரது குடும்பத்துக்கும், பவன் கல்யாண் குடும்பத்திற்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.  

12.    டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை, மார்ச் 15 ஆம் தேதி அமலாக்கத் துறை ஹைதராபாத்தில் கைது செய்திருந்தது. 165 நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 27 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தார் கவிதா.  

13.    தெலங்கானா ஐதரபாத்தில் நடந்த ராம நவமி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக வேட்பாளர் மாதவி லதா, அங்குள்ள மசூதியை நோக்கி அம்புவிடுவது போல சைகை செய்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 

14.    இறுதியாக மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 232 இடங்களை கைப்பற்றின. பாரதிய ஜனதா கட்சி மட்டும் 240 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளையும் கைப்பற்றின. 

15.    மூன்றாவது முறையாக ஆட்சியை பாஜக பிடித்திருந்தாலும், கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியைத் தான் பாஜகவால் அமைக்க முடிந்தது. தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்ற மோடி அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதித்துவமும் இருந்தது.  

16.    80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி இம்முறை வென்றது 33 இடங்களில் மட்டுமே. கடந்த முறை 62 எம்.பி.க்களை பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தன. 

17.    2019 தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருந்த ராகுல்காந்தி, 2024 மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி பெரும் பலத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக நுழைந்ததையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

18.    உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்க காரணமாக இருந்த ராமர் கோயில் கட்டிய பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில், அயோத்தியை உள்ளடக்கிய பைஸாபாத்தில் பாஜக தோல்வி அடைந்தது.  

19.    மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், தோல்விக்கு பொறுப்பேற்று மேற்கு வங்க காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதவி விலகினார். 

20.    மக்களவை சபாநாயகருக்கான குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வானவர் என்ற பெருமையைப் பெற்றார் ஓம் பிர்லா.

21.    2024 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஆந்திர பிரதேசம், ஒடிசா, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய 8 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றன. 

22.    அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பாஜக பிடித்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரேம காண்டு முதலமைச்சராக பதவியேற்றார். 

23.    ஒடிசா மாநில தேர்தலில் 25 ஆண்டுக்கால நவீன் பட்நாயக்கின் சாம்ராஜ்ஜியத்தையும், பிஜூ ஜனதா தளத்தின் ஆட்சியையும் தகர்த்து, தனிப்பெரும்பான்மையோடு பாஜக ஆட்சியை பிடித்தது. 

24.    ஒடிசா சட்டசபை தேர்தல் தோல்வியால், நவீன் பட்நாயக்கின் முகமாகவும், குரலாகவும் செயல்பட்ட தமிழரான வி.கே. பாண்டியன் அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகியது பெரும் பேசுபொருளானது. 

25.    ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்தது. 

26.    மகாராஷ்டிராவில் முதலமைச்சர் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து, இறுதியாக தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். 

27.    ஹரியாணா சட்டமன்ற தேர்தலில் பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், இந்தியர்களின் மனதில் இடம்பிடித்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்டார். ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வினேஷ் போகத் வெற்றி பெற்றார். 

28.    ஜார்க்கண்ட்டின் 5வது சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி. ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.  

29.    செப்டம்பர் மாதம் நடந்த ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 இடம் என மொத்தம் 49 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. மேலும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தேசிய மாநாடு கட்சிக்கு ஆதரவு கொடுத்த நிலையில், அக்கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீரின் முதலமைச்சராக பதவியேற்றார்.

30.    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியில் வந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டெல்லியின் முதலமைச்சராக அதிஷி மர்லினா பதவியேற்றுக் கொண்டார். 

31.    நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை குறிவைத்து, 'எவருக்கு தன் சாதி என்ன என்று தெரியாதோ அவர் கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்’ என்று பா.ஜ.க எம்.பி அனுராக் தாக்கூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 

32.    திருவனந்தபுரம் எம்பியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர், வயநாடு நிலச்சரிவை தொடர்ந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்திருந்தார். இந்த நிலையில், அதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்று போட்டு சசி தரூர், 'வயநாட்டில் மறக்க முடியாத நாட்களின் சில நினைவுகள்' என பதிவிட்டு இருந்தார்.  ஒரு துயர சம்பவத்திற்கு எப்படி மறக்க முடியாத நாட்கள் என பதிவிடலாம் என நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரது பதிவுக்கு கீழே பலரும் காட்டமாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். 

33.    உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதை அடுத்து, யார் உண்மையான இந்துக்கள் என்ற விவாதம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. 

34.    மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் சித்தராமையாவின் ஆட்சிக்காலத்தில் 4,000 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும், குறிப்பாக சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில் சட்டவிரோதமாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின. இதனைத்தொடர்ந்து அந்த மனைகளை திருப்பி தந்துவிட்டார். 

35.    நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-25 தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து காரசார விவாதங்கள் வெடித்தன. அதற்கு முக்கிய காரணம் பட்ஜெட் ஒருதலைபட்சமாகவும், அரசியல் சார்பு தன்மை கொண்டிருப்பதாகவும், பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பேசுபொருளாக மாறின. 

36.    விவசாயிகள் போராட்டத்தை வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தோடு இணைத்து பேசியதோடு, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அந்நிய சக்திகள் இந்தியாவில் வேலை செய்து வருவதாகவும் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கூறியது நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

37.    திருப்பதி லட்டு செய்யப் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு இருப்பதாக சந்திரபாபு நாயுடு சொன்னது பகீர் கிளப்பியிருந்த நிலையில், இதைத் திட்டவட்டமாக மறுத்த ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு அரசியல் ஆதாயத்திற்காக இதைச் செய்வதாகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். 

38.    மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. 

39.    20 ஆண்டுகளாக தாய் சோனியாகாந்திக்கும், அண்ணன் ராகுல்காந்திக்கும் அரசியல் களத்தில் உதவிக்கரமாக இருந்த பிரியங்கா காந்தி, வயநாடு இடைத்தேர்தல் மூலமாக தேர்தல் அரசியலில் களமிறங்கினார். அண்ணன் ராகுல்காந்தி பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட அதிகளவிலான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்று ராகுல்காந்தியின் சாதனையை முறியடித்தார். 

40.    குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு 16 மசோதாக்களை நிறைவேற்ற பட்டியலிட்டது. ஆனால், அதானி விவகாரத்தை காங்கிரஸ் கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபடுவதுடன், முடக்கியும் வந்தன. அதேநேரத்தில் பாஜக எம்பிக்களும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும் ஜார்ஜ் சோரஸுக்கும் என்ன சம்பந்தம் என்கிற பிரச்னையைக் கையில் எடுத்தனர். இதனால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. 

41.    நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் கூறியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

42.    ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ளும் வகையில் சபைக்குள் ஒருதலைபட்சமாக செயல்படுதாகக் கூறி ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை, எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் கொண்டு வந்தன. 

43.    எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இண்டியா’ கட்சிகளின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜு, ‘வாய்ப்பளித்தால் அக்கூட்டணியை வழிநடத்தத் தயார்’ என்று கூறியது இண்டியா கூட்டணியில் குழப்பைத்தை ஏற்படுத்த தொடங்கியது. 

44.    இண்டியா கூட்டணிக்கு தலைமை ஏற்கத் தயார் என்று மமதா கூறியதைத் தொடர்ந்து, சரத் பவார், லாலுவின் மகன் தேஜஸ்வி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சிகள் அணியில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்திக்கு இது பின்னடைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

45.    ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் டிசம்பர் 17 ஆம் தேதி தாக்கல் செய்தார்.

46.    அம்பேத்கர்... அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை உச்சரித்திருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow