ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. 3 நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான வேட்பு மனுதாக்கல் வரும் 10-ஆம் தேதி தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பெரியாரின் பேரன், ஈ.வெ.கே.சம்பத்தின் மகன் என்ற அடையாளங்களுடன் அரசியலுக்குள் நுழைந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் தனது தந்தை ஈவிகே சம்பத்தின் மரணத்திற்கு பிறகு, காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இளங்கோவன், திரையுலக நடிகரும், ஈவிகே சம்பத்தின் நண்பருமான சிவாஜி கணேசனுடன் ஒன்றாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினார்.
கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகிய சிவாஜி, தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இணைந்தார். பின்னர் சிவாஜி தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை அன்றைய பிரதமர் வி. பி. சிங்கின் ஜனதா தளம் கட்சியோடு இணைத்துவிட்டார். இதனால், ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது தாய் கட்சியான காங்கிரஸிலேயே மீண்டும் இணைந்தார்.
இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய இணை அமைச்சர் என பல பதவிகளை வகித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன், திருமகன் ஈவெரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா உயிரிழந்தார்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இவர் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் சார்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சட்டப் பேரவை தொகுதி காலியாகும் பட்சத்தில் ஆறு மாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது, ஜனவரி 10-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஜனவரி 17-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறும் நிலையில் ஜனவரி 20-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். அடுத்து வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
What's Your Reaction?