100 சார் கேள்விகளை கேட்க முடியும்.. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு
100 சார் கேள்விகளை அதிமுகவை நோக்கி என்னால் கேட்க முடியும் என்றும் அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
2025-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கிடையே அதிமுகவினர் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தைக் கண்டித்து ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜ் பொருந்திய கருப்புச் சட்டையும், ‘டங்க்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம்’ என்ற சுரங்க எதிர்ப்பு வாசகம் கொண்ட வெள்ளை மாஸ்க்கும் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
உடல்நிலை பாதிப்பு காரணமாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்றும் அவைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டதையடுத்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது.
உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது, மாணவி வழக்கு தொடர்பாக 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சிறப்பு நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையின் மூலம் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். யார் அந்த சார் ? என்று கேட்கிறீர்கள். உண்மையாகவே எதிர்க்கட்சியிடம் ஆதாரம் இருந்தால் புலனாய்வு குழுவிடம் சொல்லுங்கள். அதைவிட்டு விட்டு மாணவிக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் வீண் விளம்பரத்திற்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம்.
கடந்த ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிபிஐ விசாரணையில் பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அதிமுக பிரமுகர்களால் நடத்தப்பட்டதாக தெளிவாக சொல்லிவிட்டனர். பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சி தான். பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள்.
இதுபோன்ற 100 சார் கேள்விகளை அதிமுகவை நோக்கி என்னாலும் கேட்க முடியும். அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பொள்ளாச்சி விவகாரம் குறித்து முதலமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
What's Your Reaction?