மாஞ்சோலை விவகாரம்.. தமிழ்நாடு அரசு அணுகுமுறை நேர்மையாக இல்லை.. கிருஷ்ணசாமி காட்டம்
மாஞ்சோலை மக்களின் உண்மையான பிரச்சனையை தமிழ்நாடு அரசு முறையாக அணுகவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள எஸ்டேட் பகுதியை தமிழ்நாடு அரசிடம் இருந்து பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாங்கியது. ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டு எட்டாயிரத்து 374 ஏக்கர் எஸ்டேட் நிலத்தை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை, பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்தது. அதை எதிர்த்து தொழிலாளர்கள் தரப்பிலும், புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுக்களில், "மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசின் 'டான் டீ' தேயிலைத் தோட்டக் கழகம் நிர்வாகம் ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் தொழிலாளர்களுக்கு நிலம் உள்ளிட்டவற்றை வழங்கி தேயிலை தோட்டத்தை வணிக நோக்கில் பொது அல்லது தனியார் துறையிடம் ஒப்படைக்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு தெரிவித்துள்ள அனைத்து சலுகைகளையும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட தொழிலாளர்களின் விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில், மாஞ்சோலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அணுகுமுறை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் இல்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து குமுதம் செய்திகளுக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் அவர் கூறியதாவது, மாஞ்சோலை மக்களின் உண்மையான பிரச்சனையை தமிழ்நாடு அரசு முறையாக அணுகவில்லை.
தமிழ்நாடு அரசே ஒரு முடிவு எடுத்து வைத்துக்கொண்டு அதை தவறாக அணுகி வருகின்றனர். மாஞ்சோலை மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதற்கு தமிழ்நாடு அரசிற்கு உரிமை இல்லை. மாஞ்சோலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அணுகுமுறை நேர்மையாகவும், உண்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இல்லை. அதை நாங்கள் கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அம்பேத்கரை பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அம்பேத்கரின் உயரம் என்பது வேறு. அம்பேத்கரை கொச்சைப்படுத்துவதற்கோ அவரை குறைத்து பேசுவதற்கோ யாருக்கும் எந்த வித உரிமையும் கிடையாது. அமித்ஷா அம்பேத்கரை பற்றி கூறியதின் உண்மையான பாணி என்னவென்று எனக்கு தெரியாது ஆகையால் இது குறித்து நான் கருத்து கூற இயலாது.
அம்பேத்கரை வணிகமாக்கவும், அரசியல் ஆக்கவும் கூடாது. அம்பேத்கர் குறித்து பேசிய அமித்ஷாவிற்கு எதிராக கண்டனத்தை தெரிவியுங்கள் என்று அதிமுகவிடம் நான் கூற இயலாது. அது அந்தந்த கட்சியினுடைய முடிவு. அம்பேத்கரின் பெயரை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்று கூறினார்.
What's Your Reaction?