Ford: சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்... வேலைவாய்ப்பு ஆஃபர் ரெடி!

பிரபல அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு, சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முடிவு செய்துள்ளது.

Sep 13, 2024 - 20:07
 0
Ford: சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்... வேலைவாய்ப்பு ஆஃபர் ரெடி!
சென்னையில் மீண்டும் தடம் பதிக்கும் ஃபோர்டு நிறுவனம்

சென்னை: ஃபோர்டு நிறுவனத்தின் கார்கள் சென்னை, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரொம்பவே பிரபலமானவை. இந்நிறுவனம் சென்னையை அடுத்த மறைமலைநகரில் தனது தொழிற்சாலையை நடத்தி வந்தது. கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் உள்ள தொழிற்சாலைக்கு மூடுவிழா நடத்திய ஃபோர்டு நிறுவனம். இதனால் நூற்றுக்கணக்கானவர்கள் வேலையை இழந்தனர், அதேபோல், ஃபோர்டு கார் வாங்கிய வாடிக்கையாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தனது சென்னை தொழிற்சாலையை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.    

தமிழ்நாடு அரசின் ஓராண்டு கால தொடர் முயற்சியின் பலனாக ஃபோர்டு நிறுவனம் சென்னைக்கு திரும்பி வருவதாக சொல்லப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த படிப்படியான நடவடிக்கைகளாலும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர். 2023 ஜூன் மாதம் முதல் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்துள்ளன. 2023 ஜூலை மாதம் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகருக்கு பயணம் செய்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஃபோர்டு யுஎஸ்ஏ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது நிலைமையை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு ஆறு மாத காலம் அவகாசம் கேட்டது ஃபோர்டு நிறுவனம். தொழிற்சாலையை பயன்பாட்டுக்கு கொண்டுவர என்னென்ன விதமான சாத்தியங்கள் உள்ளன எனவும் திட்டமிடப்பட்டது. அதன்படி தமிழ்நாடு அரசின் தொழில்துறையும், ஃபோர்டு நிறுவனமும் ஆன்லைனிலும், நேரடியாகவும் கடந்தாண்டு பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஃபோர்டு நிறுவனமே அந்த இடத்தில் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 

அதன்பின்னர் 2024 தொடக்கத்தில் ஃபோர்டு நிறுவனம் சென்னையில் மீண்டும் தடம் பதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தது. 2024 ஜூலை மாதம் அமெரிக்காவில் உள்ள ஃபோர்டு முதன்மை தொழிற்சாலைக்கு நேரடியாகச் சென்ற அமைச்சர் ராஜா, அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளை சந்தித்து பேசியிருந்தார். அப்போது இந்தியாவை விட்டு ஃபோர்டு வெளியேறிய 2021க்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சி குறித்தும் அவர் விரிவாக விளக்கினார். மேலும் அந்நிறுவனத்தின் மறைமலைநகர் தொழிற்சாலை வளாகத்தின் மதிப்பு குறித்தும் அவர் எடுத்துக் கூறியுள்ளார். 

இறுதியாக, ஃபோர்டு நிறுவனம் திரும்பி வருவதற்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்கும் என்றும், ஆட்டோமேட்டிவ் தொழிற்பரப்பில் மீண்டும் நுழைவதற்கான ஒத்துழைப்பை நல்குவதாகவும் அமெரிக்க பயணத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து தற்போது மீண்டும் தனது சென்னை தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்க ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான அடுத்தக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் எனவும், அதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow