தடையை மீறி போராட்டம்.. பாஜக இளைஞரணியினர் கூண்டோடு கைது

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணியினரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jan 9, 2025 - 09:56
 0
தடையை மீறி போராட்டம்.. பாஜக இளைஞரணியினர் கூண்டோடு கைது
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணியினரை போலீஸார் கைது செய்தனர்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையில் சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதை உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, ‘யார் அந்த சார்’ என பல கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். அதுமட்டுமல்லாமல், குற்றவாளிகளை பாதுகாக்க திமுக முயல்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தராஜன், குஷ்பு உட்பட பலர் குற்றம்சாட்டினர். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பாஜக மகளிர் அணி சார்பில் ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டது. 

தொடர்ந்து, சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக மாணவி சிறப்பு புலனாய்வு குழுவிடம் உறுதி செய்ததாக பரவி வரும் தகவல் வதந்தி என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகையை ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள்,  பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன்,  இவ்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக் கூடும் என்றும் காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை  சம்பவத்தை கண்டித்தும், யார் அந்த சார்? என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடியும் பாஜக இளைஞரணி சார்பில் தடையை மீறி மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் போராட்டம் நடந்தது.  பாஜக இளஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா தலைமையில் நடந்த போராட்டத்தையொட்டி பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பிறகு விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா உள்ளிட்ட 51 பாஜகவினர் மீது அண்ணாசதுக்கம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow