பர்வத மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு.. கட்டணம் வசூலிப்பு
பர்வத மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக புதுப்பாளையம் வனசரகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் நான்காயிரத்து 560 அடி உயர பர்வதமலை மீது உலக பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் உள்ள இந்த கோயிலை, 3- ஆம் நூற்றாண்டில் நன்னன் எனும் குறுநில மன்னன் கட்டியதாகக் கூறப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த பர்வதமலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி, அமாவாசை தினங்களில் மலையேறி தங்கள் கைகளாலேயே தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களை கொண்டு சிவனிற்கு அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பருவதமலை கோயிலுக்கு, விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று நீண்டநேரம் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர். தொடர்ந்து நாளுக்கு நாள் பர்வத மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. படிக்கட்டுகள், பாறைகள், செங்குத்தான ஏணிப்படி, ஆகாயப்படி என கடுமையான பாதைகளை கடந்து தான் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதால், இளைஞர்கள் உற்சாகமாக கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட வனத்துறை சார்பில் பர்வதமலை ஏறும் பக்தர்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதுப்பாளையம் வனச்சரகம் சார்பில் சூழல் மேம்பாட்டு கட்டணம் என்ற பெயரில் ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்கு உட்பட்டவருக்கு கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பர்வத மலையைச் சுற்றி உள்ள தென்மகாதேவமங்கலம், கடலாடி, பட்டியந்தல், வீரளூர், சீனந்தல், கெங்கலமகாதேவி, நல்லான் பிள்ளைபெற்றாள், அருணகிரி மங்கலம், கோயில் மாதிமங்கலம் ஆகிய வருவாய் கிராமங்களில் வசிப்பவர்களுக்குக் கட்டணத்திலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பு கருதி பர்வத மலை மீது ஏற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என்றும் மற்ற நேரங்களில் மலையேறும் பாதை மூடப்படும் என்றும் இந்த நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக புதுப்பாளையம் வனசரகம் அறிவித்துள்ளது.
What's Your Reaction?