நேர்மையான மனிதராக நினைவுகூரப்படுவார்.. மன்மோகன் சிங்கிற்கு மோடி புகழஞ்சலி
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். இந்திய அரசியலில் மன்மோகன் சிங் செய்த பொருளாதாரப் புரட்சி இன்றும் நினைவுகூரப்படுகிறது. 2008-ல் உலகம் முழுவதிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை திறமையுடன் சமாளித்தார்.
இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பிரதமர் மன்மோகன் சிங்கின் நிலைப்பாட்டை உலகமே வியந்து பார்த்தது. இவ்வாறு அரசியலில் பல சாதனைகள் செய்த மன்மோகன் சிங் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வு பெற்று வந்தார். 92 வயதான மன்மோகன் சிங் நேற்று (டிச.26) தனது அரசு குடியிருப்பில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால், மன்மோகன் சிங் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி இரவு 9.51 மணிக்கு உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மன்மோகன் சிங் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மன்மோகன் சிங் உடலுக்கு துணைத் தலைவர் ஜெக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிடோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், மன்மோகன் சிங் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மன்மோகன் சிங் மறைவு நாட்டுக்கே பேரிழப்பு ஆகும். அவரது வாழ்க்கை வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாகும். அவர் எப்போதும் ஒரு நேர்மையான மனிதராக, சிறந்த பொருளாதார நிபுணராக நினைவுகூரப்படுவார். சவாலான நேரத்தில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றினார். பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருந்த நாட்டிற்கு பொருளாதாரத்தில் ஒரு புதிய திசையை உருவாக்கிக் கொடுத்தார்.
முக்கியமான சந்தர்ப்பங்களில் எல்லாம், அவர் சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்திற்கு வந்து ஒரு எம்.பி.யாக தனது கடமையைச் செய்தார். அவர் எப்போதும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் தனது நல்லுறவைப் பேணி வந்தார். நான் முதல்வராக இருந்தபோது, அவருடன் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்திருக்கிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமக்கள் சார்பாகவும், டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன் என்றார்.
What's Your Reaction?