முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அற்புதமான மனிதர்.. நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். இந்திய அரசியலில் மன்மோகன் சிங் செய்த பொருளாதாரப் புரட்சி இன்றும் நினைவுகூரப்படுகிறது. 2008-ல் உலகம் முழுவதிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை திறமையுடன் சமாளித்தார்.
இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பிரதமர் மன்மோகன் சிங்கின் நிலைப்பாட்டை உலகமே வியந்து பார்த்தது. இவ்வாறு அரசியலில் பல சாதனைகள் செய்த மன்மோகன் சிங் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வு பெற்று வந்தார்.92 வயதான மன்மோகன் சிங் நேற்று (டிச.26) தனது அரசு குடியிருப்பில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால், மன்மோகன் சிங் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி இரவு 9.51 மணிக்கு உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மன்மோகன் சிங் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மன்மோகன் சிங் உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பெங்களூரு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மிக அற்புதமான மனிதர்.பொருளாதார நிபுணர். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிவிட்டு விமான நிலையத்திற்கு உள்ளே சென்றார்.
What's Your Reaction?