HBD CHENNAI: இந்தியாவின் முதல் கோட்டையான சென்னையின் ‘புனித ஜார்ஜ் கோட்டை’ பற்றி தெரியுமா?

இந்தியாவின் பண்டைய கால நகரங்கள் பல வீழ்ந்திருக்கின்றன… குக்கிராமங்கள் விரிவடைந்து பல பெரிய நகரங்கள் உருவாகியிருக்கின்றன… ஆனால் இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய நகரமாக கம்பீரமாக நிற்கிறது ‘சென்னை’… இங்குதான் இந்தியாவிலேயே முதல் முறையாக கட்டப்பட்ட கோட்டை உள்ளது… கிட்டத்தட்ட 385 ஆண்டுக்கால நினைவுகளை சுமந்துக் கொண்டு, வங்கக் கடலை வெறித்தப்படி, மிடுக்காகவும், தமிழ்நாட்டின் முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்படும் இடமாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது அந்த கோட்டை… அதுதான் கறுப்பர் நகரமான சென்னையின் முக்கிய புள்ளியாக இருக்கும் ”புனித ஜார்ஜ் கோட்டை”…

Aug 20, 2024 - 15:09
Aug 21, 2024 - 10:16
 0
HBD CHENNAI:  இந்தியாவின் முதல் கோட்டையான சென்னையின் ‘புனித ஜார்ஜ் கோட்டை’ பற்றி தெரியுமா?

1608 ஆம் ஆண்டு சூரத்தை நோக்கி வந்த கிழக்கிந்திய கம்பெனி, அங்கு வணிகம் செய்வதற்காக ஒரு கிடங்கைக் கட்டியது. இந்தியாவிற்கு வந்த அவர்கள் கொஞ்ச காலங்களிலேயே கிழக்குக் கடற்கரைப் பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கிழக்குக் கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்தது. வங்கக் கடலை நோக்கி வந்த அவர்கள், வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் நலன்களை பாதுகக்கவும், வங்கக் கடற்கரையோரம் ஒரு துறைமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதினர். அப்போதுதான் அவர்கள் கண்ணில் சிக்கியது மதராசப்பட்டினம்…

கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக பிரான்சிஸ் டே மற்றும் ஹென்றி ஹோகன் இருவரும் இணைந்து மதரசாப்பட்டினத்தில் கடற்கரை ஒட்டிய பகுதியில் ஒரு பொட்டல்வெளியை வெங்கடாத்ரி நாயக்கரிடம் இருந்து வாங்கினர். 16 ஆயிரம் வராகன் கொடுத்து வாங்கிய இந்த பகுதியில், போர்ட் ஹவுஸ் கட்டப்பட்டதோடு, ஒரு கோட்டையும் கட்டப்பட்டது. 

ஏப்ரல் 23, 1640 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த கோட்டைக்கு புனித ஜார்ஜ் கோட்டை என பெயரிப்பட்டது. வணிக மையமாக கட்டப்பட்ட இந்த கோட்டை, இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்த அடித்தளம் போட்டுக் கொடுத்தது. இப்படியாக தொடங்கியதுதான் சென்னையின் கதை…. 

இந்த புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களுக்கு முக்கியமாக கருதப்பட்டதால், கோட்டையை சுற்றி 6 மீட்டர் உயரத்திற்கு சுற்றுசுவர் எழுப்பப்பட்டதோடு, அதே ஆண்டு கோட்டைக்கு அருகில் இருந்த போர்ட் ஹவுஸ் இடித்து நொறுக்கப்பட்டது. தற்போது தலைமைச் செயலகம் அமைந்துள்ள மையப்பகுதியில் அடுக்குமாடிக் கட்டிடம் கட்டப்பட்டு, ஆளுநர்களுக்கான இல்லங்கள், முக்கிய அலுவலகங்கள் போன்றவை அமைக்கப்பட்டன. அதோடு ஆங்கிலேய வணிகர்கள் வீடுகள் கட்டி குடியேறியதால் ஜார்ஜ் கோட்டைக்குள்ளான பகுதி வெள்ளையர் நகரம் என்று அழைக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக கோட்டைக்கு வெளியே கலைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோர் வாழ்ந்த பகுதி ’கறுப்பர் நகரம்’ என்று அடையாளப்படுத்தப்பட்டது. வெள்ளையர் நகரம், கறுப்பர் நகரம் என்று மதராசப்பட்டினத்தில் நிற வெறி தலைத்தோங்க இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த கறுப்பர் நகரம் தான் இன்று ஜார்ஜ் டவுன் என்று அழைக்கப்படுகிறது. 

ஜார்ஜ் கோட்டையை பொறுத்தவரை என்னத்தான் பெரிய பெரிய சுற்றுசுவர் எழுப்பப்பட்டிருந்தாலும், கோட்டை பலவீனமாக இருந்ததால் ஆங்கிலேய படை பிரெஞ்சு படையிடம் வீழ்ந்தது. 1746 ஆம் ஆண்டு ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சு படை கைப்பற்றியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து 1749 ஆம் ஆண்டு பிரெஞ்சு படைகளை வீழ்த்தி ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயே படை கைப்பற்றியது. ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் வந்ததும் அவர்கள் செய்த முதல் வேலை கோட்டையை பலப்படுத்துவது. ஜார்ஜ் கோட்டையின் பொறுப்பாளராக இருந்த ராபர்ட் கிளைவ், கோட்டையை சுற்றி அகழி ஏற்படுத்தி பாதுக்காப்பை பலப்படுத்தினார். 

இந்த சூழலில் பிரெஞ்சு படை கோட்டையை மீண்டும் முற்றுகையிட, 1783 வரை கோட்டையை புனரமைப்பது, பலப்படுத்துவது, கருப்பர் நகரப் பகுதியை தரைமட்டமாக்கி பீரங்கிகள் நிறுத்துவது என ஆங்கிலேயே படை படுவேகமாக செயலாற்றியது. மேலும் சில இணைப்புக் கட்டடங்கள் கட்டப்பட்டன. 1825வாக்கில் இது அரசு அலுவலகம் என்று அழைக்கப்படும் அளவுக்கு மாகாணத்தின் முக்கிய நிர்வாகக் கட்டடமாக உருவெடுத்தது.

1910ல் புதிதாக மேலும் சில கட்டுமானங்கள் செய்யப்பட்டன. கவுன்சில் கூட்டம் நடப்பதற்கான அரங்கு கட்டப்பட்டது. நிர்வாக அலுவலகம் முதல் மாடிக்கு மாற்றப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தின் அடையாளமாக உள்ள கறுப்பு நிற சார்னோகைட் பாறைகளால் ஆன தூண்கள் நிறுவப்பட்டன. இந்தக் கட்டடத்தின் பின் பகுதியில் 1958ல் புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டது. 1694ல் கட்டப்பட்ட பகுதிகளோடு, இன்னமும் நிமிர்ந்து நிற்கிறது இந்தக் கட்டடம்.

புனித ஜார்ஜ் கோட்டையின் மற்றொரு கம்பீரமான அம்சமாக விளங்குவது அதன் கொடிமரம். கோட்டை கொத்தளத்தின் மீது அமைந்திருக்கும் இந்தக் கொடி மரம், 148 அடி உயரம் கொண்டது. இந்தியாவிலேயே மிக உயரமான கொடி மரங்களில் இதுவும் ஒன்றாகும். 1688ஆம் ஆண்டில் தேக்கு மரத்தால் செய்யப்பட்டு நிறுவப்பட்ட இந்தக் கொடி மரத்தில் தான், 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிகாலை இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அந்தக் கொடி தற்போது கோட்டைக்குள்ளேயே உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. தேக்கு மரத்திலான இந்தக் கொடிக் கம்பம் பழுதடைந்ததால் 1990களில் இரும்பு கம்பம் நிறுவப்பட்டது. 

கிட்டத்தட்ட நான்காவது நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த ஜார்ஜ் கோட்டைஉ, இன்றளவும் இந்திய ராணுவத்தின் அலுவலகங்கள், தமிழ்நாடு அரசின் அலுவலகங்கள், தலைமைச் செயலகம், இந்தியத் தொல்லியல் துறையின் அலுவலகம், அருங்காட்சியகம் என முக்கியத்துவம் குறையாமல் கம்பீரமாக நின்றுக் கொண்டிருக்கிறது...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow