தமிழ்நாடு

புதுக்கோட்டையில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை-டாஸ்மாக்கை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

புதுக்கோட்டையில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை-டாஸ்மாக்கை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
கொலை செய்யப்பட்ட முருகேஷ் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், மழையூர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முருகேஷ் (25) என்பவர் அப்பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே இருசக்கர வாகனத்தில் நின்றபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர்.

இளைஞர் வெட்டிக்கொலை

இதில் முருகேசன் படுகாயமடைந்த நிலையில் மழையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவரது உடல் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், முருகேசனை வெட்டிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி முருகேசன் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் என 500-க்கும் மேற்பட்டோர் மழையூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவதால் புதுக்கோட்டை - கறம்பக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உறவினர்கள் போராட்டம்

மேலும் அந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது எனக் குற்றம்சாட்டி பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர்.

தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஆலங்குடி டிஎஸ்பி கலையரசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதோடு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் அடிப்படையில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.