தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின், இலங்கைக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு சென்றடைந்தார். அங்கு கொட்டும் மழையிலும், அவருக்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்பட 6 அமைச்சர்கள் வரவேற்றனர்.
இலங்கையில் பிரதமர் மோடி
தன்னை வரவேற்ற இலங்கை அமைச்சர்களுக்கு எக்ஸ் தளப்பக்கத்தில், நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இலங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி தங்கும் ஹோட்டலை அடைந்தபோது, அவரை இலங்கை வாழ் இந்தியர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர். மேலும் பரிசுப்பொருட்களை அளித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். பிரதமர் மோடி அவர்களுக்கு கைக்கொடுத்து நன்றி தெரிவித்தார்.
அதிபருடன் சந்திப்பு
மேலும் பிரதமர் மோடி, சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை பொம்மலாட்டம் வழியாக காண முடிந்ததாகவும், பொம்மலாட்டக்கழகத்தினரை பாராட்டுவதாகவும், இந்த கலாச்சார பிணைப்புகள் எப்போதும் செழிக்கட்டும் என்றும் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்காவை சந்திக்கிறார். இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயான இச்சந்திப்பில், 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீனவர்கள் விடுதலை
இந்தப் பயணத்தின் போது, கடந்த 2019ம் ஆண்டு இந்தியா சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அனுராதபுரத்திற்கு பிரதமர் மோடி மீண்டும் செல்ல உள்ளார். அதைத்தொடர்ந்து திரிகோணமலையில் சோலார் மின் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்தியாவின் நிதியுதவியில் இலங்கையின் திரிகோணமலையில் சோலார் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரதமர் மோடி , இலங்கை அதிபருடனான சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் கைது குறித்தும், கச்சத்தீவு தொடர்பாகவும் பேச வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 11 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா
பிரதமர் மோடிக்கு இலங்கையில் உற்சாக வரவேற்பு...பயணத்திட்டம் என்ன...?
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்காவை பிரதமர் மோடி இன்று சந்திக்க உள்ள நிலையில், 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.