இந்தியா

மராத்தியை கையில் எடுத்த நவநிர்மாண் சேனா...எச்சரிக்கை விடுத்த தேவேந்திர பட்னாவிஸ்

சட்டத்தை யாராவது கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறினால் பொறுத்துக்கொள்ள முடியாது என மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

 மராத்தியை கையில் எடுத்த நவநிர்மாண் சேனா...எச்சரிக்கை விடுத்த தேவேந்திர பட்னாவிஸ்
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்

மும்பையில் உள்ள வங்கி ஒன்றில் மராத்தி மொழியை பேச முடியாது என்றும் இந்தி தெரியாத என்றும் வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. இதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் மாநில மொழியான மராத்தியில் பேச அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மராத்தி மொழி

இந்த நிலையில் நவ நிர்மாண் சேனா கட்சியினர் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் மராத்தி மொழியில் பேச வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நேற்று தானே மற்றும் புனே ஆகிய பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சென்று மேலாளரிடம் மராத்தி மொழியில் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஊழியர் ஒருவரையும் தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்த ஆங்கிலப் பதாகைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்

இது தொடர்பாக நேற்று பேசிய அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், “மராத்தி மொழியை பயன்படுத்த வலியுறுத்துவது தவறில்லை. அதே நேரம், அவ்வாறு செய்யும்போது யாராவது சட்டத்தை கையில் எடுத்தால், அதைப் பொறுத்துக்கொள்ளப்படாது.அவ்வாறு அத்துமீறி நடந்துகொண்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.