தமிழகத்தில் கனிமவள முறைக்கேட்டால் அரசு ரூ. 5832 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து முறையாக சிபிஐ விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று சிபிஐ அதிகாரிகள் தனியார் கனிம வள நிறுவனம் (விவி மினரல்ஸ்) தொடர்பான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் கனிம வள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தாது மணல் எடுப்பதற்காக, வி.வி.மினரல்ஸ், டிரான்ஸ் வேல்டு கார்னெட் நிறுவனம் உட்பட 7 நிறுவனங்களுக்கு, திருநெல்வேலி மாவட்டத்தில் 52 உரிமங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 6, கன்னியாகுமரியில் 6 என மொத்தம் 64 உரிமங்கள் வழங்கப்பட்டது. சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கும், கொண்டு செல்வதற்கும் 2013 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பிறகும், சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததால் ஏற்பட்ட 5,832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தான் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்ததில், 2018 முதல் 2022 ஆண்டு வரை இடையேயான ஆண்டுகளில் மட்டும் சுமார் 16 லட்சம் டன் அளவிலான தாது மணல் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து எடுக்கப்பட்ட ஆய்வில் தான் அரசு இழப்பு குறித்து தெரிய வந்தது.
இதனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், அமலாக்கத்துறை, வருமானவரி துறை, சுங்கத்துறை, வணிகவரித்துறை ஆகிய துறைககள் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சிபிஐ இயக்குநர் சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி தான் தற்போது சிபிஐ தங்களுடைய சோதனையை தொடங்கி உள்ளனர். மேலும் சென்னை எழும்பூரில் பாந்தியன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹரி என்பவரது வீட்டிலும், சுகுமார் என்பவரது வீட்டிலும் சிபிஐ சோதனை நடந்து வருகிறது.
வழக்கறிஞர் பேட்டி
இந்த சோதனை குறித்து விவி மினரல்ஸின் இயக்குனர்களில் ஒருவரான ஜெகதீசனின் வழக்கறிஞர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். சிபிஐ அதிகாரிகள் சோதனைக்கான உத்தரவு நகலை கொடுத்து தான் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். சிபிஐ சம்மன் கொடுத்தாலும் முறையாக ஆஜராவோம். உயர்நீதிமன்றம் உத்தரவின் படி சோதனை நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்ல முடிவு செய்துள்ளோம்" என்று வழக்கறிஞர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
விவி மினரஸ்யின் அலுவலகங்கள் செயல்படக்கூடிய நெல்லை மாவட்டம் திசையன்விளை கீரைகாரன் தட்டு பகுதியில் சொந்தமானவைகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை 5 மணி நேரத்தை கடந்தும் சோதனை அனைத்து இடங்களில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
கனிமவள முறைகேடு: தமிழகத்தில் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!
கனிமவள முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். ரூ. 5832 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.