தமிழ்நாடு

“கூடா நட்பு கேடாய் முடியும்” –விருதுநகரில் பாஜக போஸ்டரால் பரபரப்பு

கூடா நட்பு கேடாய் முடியும்.. வேண்டும் மீண்டும் அண்ணாமலை.. என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜக நிர்வாகி ஒட்டியுள்ளதால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“கூடா நட்பு கேடாய் முடியும்” –விருதுநகரில் பாஜக போஸ்டரால் பரபரப்பு
விருதுநகரில் பாஜக நிர்வாகியால் ஒட்டப்பட்ட போஸ்டர்

வரும் 2026 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைக்கும் முயற்சியில் இரு கட்சி தலைமைகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சட்டமன்றத்தில் பேசி இருந்தனர்.

இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு

அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து பேசிய இபிஎஸ், தமிழக மக்களின் பிரச்னைகள் மற்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் நிலை குறித்து பேசியதாக தெரிவித்தார். இந்த நிலையில் அமித்ஷா உடனான இபிஎஸ் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

2026 சட்டமன்றத்தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாக இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் எக்ஸ் பதிவு அமைந்தது. இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் தளப்பக்கத்தில், 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும், மது வெள்ளமும், ஊழல் புழலும் முடிவுக்கு வரும் என குறிப்பிட்டிருந்தார்.

கூட்டணியை விமர்சித்து போஸ்டர்

மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவிக்காலம் முடிவடையும் நிலையில், பாஜகவுக்கு புதிய மாநில தலைவரை தேர்வு செய்யும் பணியில் கட்சி தலைமை ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் “தற்குறியுடன் கூட்டணி வேண்டாம்... கூடா நட்பு கேடாய் முடியும்” என்றும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக “வேண்டும் மீண்டும் அண்ணாமலை” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜக விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் ஒட்டியுள்ள போஸ்டரால் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாகிகள் அதிருப்தி

இந்த போஸ்டரில் பிரதமர் மோடி, பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி குறித்து இரு கட்சிகளின் தலைமைகளும் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜக நிர்வாகியின் போஸ்டர் பாஜக, அதிமுகவினரிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.