சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞானசேகரன் என்பவரை கடந்தாண்டு டிசம்பர் மாதம் காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் நிலுவையில் இருந்து வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் ஞானசேகரன் வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப்பாக ஞானசேகரனின் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் சோதனை மேற்கொண்டு அவரது செல்போன் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்து தடயவியல் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஞானசேகரனின் செல்போனில் பல உரையாடல்கள் உள்ளதாக தகவல் வெளியானது.
செல்போனில் உரையாடல் நடத்தியுள்ள நபர் ஞானசேகரன் தானா என்பதனை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க ஞானசேகரனை விதவிதமாக பேசச்சொல்லி குரல் மாதிரி பதிவு செய்தனர். ஒவ்வொரு குரலிலும் ஒவ்வொரு ஒலி மற்றும் உச்சரிப்பு வேறுபாடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரமாக குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு ஞானசேகரனை சைதாப்பேடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
பாலியல் வழக்கை தொடர்ந்து, பள்ளிக்கரணை போலீசார் கொள்ளை வழக்கில் ஞானசேகரனை கைது செய்தனர். தொடர்ந்து, மேலும் ஆறு கொள்ளை வழக்கில் கைது செய்து அவரது வீட்டிலிருந்து 80 சவரன் நகைகளை பறிமுதல் செய்த நிலையில், தார் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஞானசேகரனுக்கு எதிராக குற்றப் பத்திரிகையும் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளது. எனவே இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கூறி ஞானசேகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு சென்னை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசரிக்கப்பட்டது.அப்போது ஞானசேகரன் நீதிபதி முன்பு ஆஜார் படுத்தபட்டார். இந்த மனு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு
அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கு.. ஆதாரம் இல்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்க மனுத்தாக்கல்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும், ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதாக தெரிவித்து, வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.