தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. 2019ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்த இந்த வழக்கில், பல பெண்களைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய கும்பலின் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.
பாலியல் வன்கொடுமை வழக்கு
இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகின்றது.
9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்பட்டு வருகின்றது.
நீதிமன்றத்தில் ஆஜர்
விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் மூடப்பட்ட நீதிமன்ற அறைகளில் விசாரணையில் பங்கெடுத்தனர். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சி விசாரணை முடிந்த நிலையில், இதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்பதற்காக, 9 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தரப்பில் விசாரணையானது நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை விறுவிறுப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்