அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை.. தாமாக முன் வந்து விசாரிக்கும் நீதிமன்றம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவரும் அவரது காதலனான மாணவன் ஒருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தனிமையில் இருப்பதை தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்த ஞானசேகரன், மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆதாரங்களின் அடிப்படையில் ஞானசேகரனை கைது செய்த காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக வெளியான முதல் தகவல் அறிக்கையில், தாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன் மற்றும் பேராசிரியரிடம் காண்பித்து டிசியை தரவைப்பேன் என ஞானசேகரன் மிரட்டியதாகவும், அலைபேசியில் இருந்த தனது தந்தை செல்போன் எண்ணை எடுத்துக் கொண்டு அவருக்கு வீடியோ அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் முதல் தகவல் அறிக்கை வெளியாகி சர்ச்சையானது. பொதுவாக பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், போக்சோ போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் கூடிய முதல் தகவல் அறிக்கை சமூக வலைதளத்தில் வெளியானதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, முதல் தகவல் அறிக்கை நகலையோ சமூக வலைதளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சி தலைவர்களும் சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. அதாவது, இவ்வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகளுக்கு வழக்கறிஞர் வரலட்சு என்பவர் கடிதம் அனுப்பி உள்ளார் என்றும் கடிதத்தை ஏற்று வழக்கை விசாரிக்க எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை இன்றே விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
What's Your Reaction?