குளிக்க சோம்பேறித்தனமா? வந்தாச்சு மனித வாஷிங் மிஷின்.. இதுல இவ்ளோ அம்சம் இருக்கா...!
குளிப்பதற்கே சோம்பல் படுபவர்களுக்காகவே ஒரு பிரத்யேக மிஷினை ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம் வடிவமைத்துள்ளது. மனிதர்களை துவைத்தெடுக்கும் இந்த வினோத மிஷின் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
வேலை பளு, அலைச்சல் அதிகமாக இருக்கும் நாட்களில், வெண்ணீரில் ஒரு குளியலை போட்டு விட்டுதான் சிலர் உறங்கவே செல்வார்கள். ஆனால், இன்னும் சிலரோ, நாளுக்கு ஒரு முறை குளிக்கவே சோம்பல் பட்டுக்கொண்டு முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு நாளை தொடங்குவர். அப்படியானவர்களுக்கே ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம் ஸ்பெஷல் இயந்திரம் ஒன்றை தயார் செய்துள்ளது.
தொழில்நுட்பம் வளர வளர வாஷிங் மிஷினில் தொடங்கி, ஏஐ ரோபோ வரை மனித வேலைகளை எளிதாக்குவதற்கு பல கண்டுபிடிப்புகள் வந்துக்கொண்டே தான் இருக்கிறது. அதிலும், தொழில்நுட்பத்தில் எப்போதும் ஒரு படி மேல் இருக்கும் ஜப்பானில் இயங்கும் SCIENCE Co என்ற நிறுவனம், மனிதர்களை குளிக்கவைப்பதற்கான ஒரு வாஷிங் மிஷினை தயாரித்து அறிவியல் உலகத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Fighter Jet போல இருக்கும் இந்த மிஷின் 15 நிமிடங்களில் ஒரு மனிதனை குளிப்பாட்டி, சுத்தம் செய்துவிடுமாம். இந்த மிஷினில் ஒருவர் படுத்தவுடன், அவரது உடலை ஆய்வு செய்து உடல் சூட்டிற்கேற்ப வெண்ணீரை அது நிரப்புமாம். பிறகு மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை உடலில் பீய்ச்சி அடிக்குமாம். இதனால் ஒருவரது உடலில் இருக்கும் அழுக்குகள் நீக்கப்படும் என இதன் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இது உடலை மட்டுமின்றி நமது மனநிலையையும் சாந்தப்படுத்தும் திறன் கொண்டதாம். நமது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி மூலம் கண்டறிந்து, நம்மை ரிலாக்ஸ் ஆக்க, வீடியோக்கள், பாடல்கள் ஆகியவையை இந்த இயந்திரத்திற்குள்ளேயே ஸ்கிரீனிங் செய்யப்படுமாம். இதன் மூலம் மனதளவிலும் நிம்மதியாக ஒரு மனிதன் உணரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கருவி ஒசாகாவில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாம். சுமார் 1000 பேர் இந்த மனித வாஷிங் மிஷினில் குளித்து பார்க்க போகிறார்கலாம். மேலும் இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இந்த மிஷினின் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவ, குளிக்க சோம்பேறித்தனம் படுபவர்களுக்கு இந்த மிஷின் தேவைப்படும் என கமெண்ட் அடித்துவருகின்றனர்.
What's Your Reaction?