ஆதவ் அர்ஜுனாவின் கலகம்... விசிக-திமுக கூட்டணியில் கலவரம்.. சாட்டையை சுழற்றிய திருமா
கட்சியின் நலனுக்காக என கூறி விசிகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமாவின் இந்த நடவடிக்கைக்கும் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

தவெக முதல் மாநாட்டை நடத்தியதிலிருந்தே திமுகவை அரசியல் எதிரியாக கருதி, இறங்கி வேலை செய்யும் தவெக தலைவர் விஜய், அதன் கூட்டணி கட்சிகள் மீது கல்லெறிந்து வருகிறார். அதிலும் விசிகவை குறிவைத்து எரியப்பட்ட இந்த கல்லில், வாண்ட்டடாக வந்து கல்லடி பட்ட விசிகவின் பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜுனா, ”ஆட்சியில் பங்கு” என ஆரம்பம் முதலே பல கருத்துகளை தவெகவுக்கு தோதாக வைத்து வந்தார். இதற்கு ஆதவ் அர்ஜுனாவை பின்னால் இருந்து இயக்குவது, திருமா தான் எனவும் சில நேரங்களில் பேசப்பட்டது. இதனால் விசிகவில் இருந்த சீனியர்கள் ஆதவ் அர்ஜுனா மீது கடும் கோபமடைந்ததாக கூறப்பட்டது. ஆனாலும், அவர் மீது பெரும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்காததால், அதுவே ஆதவ் அர்ஜுனாவுக்கு க்ரீன் சிக்னல் போல் ஆகிவிட்டது.
இதனையடுத்து, ”எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவில், தவெக தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொள்வார் என சொல்லப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் இதிலிருந்து விலகிவிட்டார்.
ஆனால், இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு பேசிய விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “பிறப்பால் அனைவரும் சமம் என்பதே அண்ணல் அம்பேத்கரின் கொள்கை; அப்படியானால் பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என ஒரு போடு போட்டார். இதோடு விட்டாலும் பரவாயில்லை, “2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, இனி தமிழ்நாட்டில் மன்னராட்சிக்கு இடமில்லை” என்பதாக அடுத்து ஒரு சிக்ஸர் விளாசினார்.
இந்த விமர்சனங்கள் மறைமுகமாக இல்லாமல், நேரடியாகவே திமுகவை டார்க்கெட் செய்தது தான் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது. ஆதவ் அர்ஜுனா வீசிய அஸ்திரங்கள் அனைத்தும், திமுக கூட்டணியை நிலைகுலையச் செய்ததால், விசிக தலைவர் திருமாவளவனும் செல்லும் இடமெல்லாம் இதுகுறித்து விளக்கம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகினார்.
இதனால் கடும் கோபத்திற்கு ஆளான திமுக, விசிகவுக்கு மாற்றான ஏற்பாட்டையும் யோசிக்க ஆரம்பித்துவிட்டதாக அறிவாலய வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதன்படி, திருமாவை கழற்றிவிட்டால், மூத்த அமைச்சர் துரைமுருகன் மூலம் பாமகவை இழுக்கவும் திமுக தயராக இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம், தலித் சமூகத்தை எதிர்க்கும் சமூகங்களின் வாக்குகளை பெறமுடியும் என திமுக தலைமை திட்டம்போடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரச்சனை பூதாகரமாவதற்கு முன் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என நினைத்த திருமா கட்சியின் சீனியர்களை வைத்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி, விசிகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை கட்சியின் நலனுக்காக 6 மாதங்கள் இடைநீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், திமுகவை சமாதானப்படுவதற்காகவும், கூட்டணியை பாதுகாக்கவும் தான் திருமா இந்த முடிவை எடுத்திருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துவருகின்றனர். ஆனால், ஆதவ் அர்ஜுனா மீதான இந்த நடவடிக்கைக்கு திமுகவில் இருந்த எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை என கூறி விமர்சனங்களுக்கு திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
What's Your Reaction?






