பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள நிலையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விமான நிலையம் அமைக்க 13 கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரத்து 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களைச் சேந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் 900 நாட்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில் கிராமத்திற்குள் அரசியல் தலைவர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை வரும் 19-ஆம் தேதி அல்லது 20-ஆம் தேதி நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக பாதுகாப்பு கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
விஜய் அங்கு செல்வதால் கூட்டம் அதிகளவில் கூட வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு வழங்ககோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவை பரிசீலித்த போலீஸார் பரந்தூர் மக்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, காவல்துறை அனுமதி அளித்த இடத்தில் மட்டும் தான் விஜய் மக்களை சந்திக்க வேண்டும்.
பரந்தூர் ஏகனாபுரத்திற்கு அனுமதிக்கப்பட்ட வாகனங்கத்தில் , அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தான் வரவேண்டும். கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கிராம மக்களை விஜய் சந்திப்பதற்காக இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை காவல்துறை தேர்வு செய்து கொள்ள கூறிய நிலையில் இன்று மாலை எந்த இடத்தில் விஜய் மக்களை சந்திக்க உள்ளார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சி தொடங்கிய பின்னர் முதன் முதலாக களத்தில் மக்களை சந்திக்க உள்ளார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் மிகவும் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?