அரசியல்

திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை.. செல்வப்பெருந்தகை திட்டவட்டம்!

காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று இன்று நடந்த தொகுதி பங்கீடு பேச்சில் திமுக உறுதி அளித்துள்ளது.

திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை.. செல்வப்பெருந்தகை திட்டவட்டம்!
Selvaperunthagai
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் சூடுபிடித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை அறிவாலயத்தில் திமுக குழுவினரை கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் திமுகவிடம் வழங்கப்பட்டது.

மாநிலங்களவை இடம் குறித்து உறுதி

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று திமுக தலைமை ஏற்கனவே உறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார். "பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவும் நம்பிக்கையுடனும் சென்று கொண்டிருக்கிறது, இதில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

கூட்டணி குறித்த நிலைப்பாடு

திமுக உடனான கூட்டணி குறித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, "திமுக உடன் எங்களுடைய கூட்டணி இயற்கையான கூட்டணி. நம்பிக்கையான, உறுதியான கூட்டணி. தமிழ் மண்ணைப் பாதுகாக்கும் கூட்டணி" என்று புதெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுகவுக்கு இடமில்லை என்பதில் தாங்கள் தெளிவாக இருப்பதாகவும், ராகுல் காந்தி தமிழகத்தின் மீது மிகுந்த பற்று வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

சர்ச்சைகளுக்கு விளக்கம்

வேறு கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல்களை அவர் மறுத்தார். கிரிஷ் சோடங்கரின் கருத்து தவறாகத் திரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சி திமுகவுடன் மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்றார். மேலும், "எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்" என்று அவர் தெரிவித்தார்.