சென்னை அசோக் நகர் காசி டாக்கிஸ் திரையரங்கில் தமிழ்நாடு தெலுங்கு பீபுள் சொசைட்டி சார்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நடிகை கஸ்தூரிக்கு கடைசி நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையான கருத்து பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து, ஜாமீன் தளர்வு வழங்கிய நிலையில், பின்பு எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார்.
இதனைத் தொடந்து, எழும்பூர் காவல் நிலையத்தில் இன்று கையெழுத்திட வந்த நடிகை கஸ்தூரி கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையா..? என்பது குறித்த கேள்விக்கு; காய்த்த மரம் கல்லடிபடும்.. ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு வேறு கட்சிக்கு சென்றால் எந்த கட்சியும் அவரை வேண்டாம் என்று சொல்லக்கூடிய நிலையில் அவர் இல்லை. அனைத்து கட்சியினருக்கும் மார்டின் லாட்டரி குடும்பத்தார் நிதி வழங்கி இருக்கிறார்கள்.. அரசியல் ரீதியாக ஆதவ் அர்ஜூனா பேசுவதால் சில முரண்பாடு எழலாம்.
மன வளர்ச்சி குன்றிய மாணவி 10 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு, நினைத்து கூட பார்க்கமுடியாத சம்பவம். இது போன்ற வக்கிர குணம் கொண்ட ஆண்கள் திருப்பி அடிப்பவர்களை தாக்குவதில்லை. தங்களை தற்காத்துக் கொள்ள இயலாத, தங்களுக்கு என்ன நடக்கிறது என அறியாதவர்கள் மீது இதுபோன்ற வன்முறையை செய்கிறார்கள். மனநலம் குன்றிய குழந்தைகளை கடவுளுக்கு சமமாக பார்க்க வேண்டும்.
தவறே செய்யாதவர்கள் தனிப்படை கொண்டு கைது செய்கிறார்கள். காரண கைதிகளாக பலர் கைது செய்யப்படுகிறார்கள்.. இது போன்ற விஷயங்களுக்கு ஈவு இரக்கம் காட்டாமல் தண்டனை வழங்க வேண்டும். இவர்கள் மீது மனிதர்களுக்கான சட்டத்தை உபயோகிக்கக்கூடாது.
மக்கள் கொதித்துபோய் தண்டனை வழங்க வேண்டும் என சொல்லும் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும். சிறப்பு குழந்தைகளுக்கு தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் வேறு எங்கு சென்று கேட்க முடியும். இது போன்ற பாலியல் சீண்டல்கள் செய்வோரை என்கவுண்டர் செய்தாலும் அதனை மக்கள் எதிர்க்கமாட்டார்கள் என்று கூறினார்.
நேற்று தெலுங்கு மக்களின் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்தான கேள்விக்கு; நேற்றைய நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு என்னை போகவிடவில்லை. நிகழ்ச்சி நடக்கும் அந்த இடத்தில் எக்கச்சக்கமான போலீசார் குவிந்து மிகப்பெரிய பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த இடத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை. அதனால், இரவு வேறொரு இடத்தில் வைத்து அனைவரையும் சந்தித்தேன். இப்போது அவர்களுடனே அடுத்த நிகழ்ச்சிக்கு தயாராகிறோம். புழல் சிறையிலிருந்து வெளியேறியதும் ஹைதராபாத் சென்றபோது அங்கிருந்து தெலுங்கு மக்கள் இரு கரம் கூப்பி என்னை வரவேற்றார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த போதும் உங்களைப் பற்றி எங்களுக்கு தெரியாதா என ஆறுதலாக பேசினார்கள். அபாண்டமான பழிகளை தெலுங்கு மக்கள் நம்பமாட்டார்கள். கணவர் வீட்டாரும் இது தொடர்பாக எந்த ஒரு கேள்வியையும் முன்வைக்கவில்லை. செய்திகளை படித்து என்ன நடந்ததென்ன புரிந்து கொண்டதாக கூறியதாக நடிகை கஸ்தூரி கூறினார்.