காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் கடைஞாயிறு விழா கோலாகலம்!
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ. 24), கடைஞாயிறு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பல பிரசித்தி பெற்ற திருக்கோயில்கள் நோய் தீர்க்கும் திருத்தலங்களாக விளங்கி வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலானது தலைவலி, காது, மூக்கு, தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சனைகள் தீர்க்கும் ஓர் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இத்திருத்தலத்தில் கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய 5 ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் கடை ஞாயிறு விழாவில் பக்தர்கள் பச்சரிசி மாவு, வெல்லம் ஆகியவற்றினால் அகல் விளக்கு ஏற்றி அதனை மண் சட்டியில் வைத்து தலையில் ஏந்தி சாமி தரிசனம் மேற்கொண்டு கோயில் பிரகாரங்களில் வலம் வந்து வழிபட்டால் அப்பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம். இந்த கடை ஞாயிறு என்று சொல்லப்படக்கூடிய இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்துக்கடன்களை செலுத்தி வழிபடுவது வழக்கமாகும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில், முதலாம் வாரம் கடை ஞாயிறு விழாவானது தொடங்கியுள்ளது. அந்த வகையில் கார்த்திகை இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ. 24), கடைஞாயிறு விழா நடைபெறுகிறது. இவ்விழாவினையொட்டி மூலவர் கச்சபேஷ்வரருக்கும் சுத்தாம்பிகை அம்மையாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இவ்விழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து அரிசி மாவினால் விளக்குகள் தயார் செய்து விநாயகர் மற்றும் கொடிமரம் அருகே அர்ச்சனைகள் மேற்கொண்டனர். அதன் பின் அந்த விளக்குகளில் தீபம் ஏற்றி தலையில் வைத்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தி நோய் தீர்க்க வேண்டுதலுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இந்த கடைஞாயிறு விழாவையொட்டி திருக்கோயில் நிர்வாக தரப்பில் தண்ணீர் ஏற்பாடுகளும், முதியவர்கள் செல்ல ஏதுவாக சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் கூட, காவல்துறையினரும், கோயில் நிர்வாகத்தில் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்சி வருகின்றனர். முதல் வார கடை ஞாயிறை விட, இரண்டாம் வார கடை ஞாயிறு விழாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?