சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர்.. பிசிசிஐ நிபந்தனைக்கு அடிபணிந்த பாகிஸ்தான் நிர்வாகம்..!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஹைபிரிட் முறையில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டதாக முன்னாள் வீரர் ரஷித் லடீஃப் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் முழுமையாக நடத்தாமல், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில், ஹைபிரிட் முறையில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஒப்புக் கொண்டதாக முன்னாள் வீரர் ரஷித் லடீஃப் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கும் இந்த போட்டிகள் மார்ச் முழுமையாக பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தானில் விளையாட மற்ற நாடுகள் ஒப்புதல் தெரிவித்த நிலையில், இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்குமா..? என்று கேள்விகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட, மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், இந்திய அணியை பாகிஸ்தானிற்கு விளையாட அனுமதிக்க மாட்டோம் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் இந்தியா, பாகிஸ்தான் வந்து விளையாடவில்லை என்றால் நாங்கள் இனி எப்போதும் இந்தியாவிற்கு வந்து விளையாட மாட்டோம் என அறிவித்தது. ஆனால் , பிசிசிஐ திட்டவட்டமாக பாகிஸ்தானிற்கு வரமாட்டோம், ஐக்கிய அரபு அமீகரத்திற்கு போட்டியை மாற்றவேண்டும் என ஐசிசிக்கு கோரிக்கை விடுத்தது.
சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்பது குறித்து, ஐசிசிக்கு பிசிசிஐ தரப்பில் விளக்க கடிதத்தையும் அளித்தது. அதில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடல் முறையில் நடத்தவும் பிசிசிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஐசிசி கருத்தை திட்டவட்டமாக மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், ஆசியக் கோப்பையில் நடந்ததை போல, ஹைபிரிட் மாடல் முறையை சாம்பியன் டிராபி தொடரில் நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என கூறியது. வரும் பிப்ரவரி மாதம் போட்டி நடைபெறும் நிலையில், ஐசிசி போட்டிக்கான அட்டவணையை முழுமையாக வெளியிடவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ உட்பட சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்கும் நாடுகளின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த கிரிகெட் சங்க நிர்வாகிகள் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில், பாகிஸ்தான் நிர்வாகத்தை தவிர்த்து மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தரப்பில் ஹைபிரிட் முறையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துவதற்கு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஹைபிரிட் முறையில் போட்டியை நடத்த ஒப்புக்கொள்ளாமல், சாம்பியன் டிராபி தொடரை நடத்துவதில் இருந்து பாகிஸ்தான் வெளியேறினால், ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
What's Your Reaction?