பக்காவாக ஸ்கெட்ச் போட்ட மர்ம நபர்கள்.. தொழிலதிபர் கொலையால் பரபரப்பு
பாட்னாவில் பூர்வீக நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் டானாபூர் பகுதியில் 60 வயதானா பரஸ் ராய் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இவர் தொழிலதிபராகவும் உள்ளார். இந்நிலையில், பரஸ் ராய் தனது வேலைகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரை ஆறு மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துள்ளனர்.
பின்னர் பரஸ் ராய் தனது வீட்டை நெருங்கியதும் மூன்று பேர் தங்களது அடையாளம் தெரியாதவாறு ஹெல்மெட் அணிந்தபடி கையில் ஆயுதங்களுடன் அவரை பின் தொடர்ந்துள்ளனர். அவர் வீட்டிற்குள் நுழைந்ததும் மர்ம நபர்களில் ஒருவர் பரஸ் ராயை துப்பாக்கியால் தொடர்ந்து தாக்கியுள்ளார். பின்னர், அவர்கள் சம்பவ இடத்திலிருந்து உடனடியாக தப்பியோடினர்.
துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பரஸ் ராயை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தடவியல் நிபுணர்கள் கொலை நடந்த இடத்தில் இருந்த துப்பாக்கி குண்டுகளை சேகரித்து ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பரஸ் ராய் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பூர்விக நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பரஸ் ராய் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?