இந்தியா

சட்டமானது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டமானது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

குடியரசுத் தலைவர் ஒப்புதல்

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என முன்னதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின்னர் சட்டமாக்கப்பட்டுள்ளது.


வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா

நாடு முழுவதும் வக்ஃபு வாரிய சொத்துகளை ஒழுங்குப்படுத்த வழிவகுக்கும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக்குழு 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதைத்தொடர்ந்து இந்த வாரம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ஆதரவும், எதிர்ப்பும்

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது, இரு அவைகளிலும் இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் பாஜக அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்பி இருந்தது.

இந்த நிலையில் வக்ஃபு சட்டத்திருத்தங்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல் அளித்ததாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
மக்களவையில் மசோதாவிற்கு ஆதரவாக 288 பேரும், 232 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். அதேப்போல் மாநிலங்களவையில் ஆதரவாக 128 பேரும், எதிர்ப்பாக 95 பேரும் வாக்களித்துள்ளனர்.