ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- ராமேஸ்வரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் கடந்த 1914-ம் ஆண்டு 2.2 கி.மீ தூரத்திற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டது.
இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி 2024-ஆம் ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 6) பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார்.
பிரதமர் மோடி வருகை
முன்னதாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் மண்டபத்திற்கு வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைந்துள்ள மேடைக்கு வந்தார். அங்கு பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து பாம்பனில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த பிரதமர் மோடி, ராமேஸ்வரம்- தாம்பரம் ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சாமி தரிசனம்
பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
பழுதான பாலம்
பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட பாம்பன் பாலத்தில் திடீரென பழுது ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக செங்குத்து தூக்கு பாலத்தின் ஒருபக்கம் ஏற்றமாகவும், ஒரு பக்கம் இறக்கமாவும் உள்ளதால் பாலத்தை கீழே இறக்க முடியாமல் அதிகாரிகள் தவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பழுது சரி பார்க்கப்பட்ட பின் பாலம் இறக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாம்பன் பாலம் பழுதடைந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியா
திறப்பு விழா அன்றே பழுதான பாம்பன் பாலம்.. என்னதான் நடந்தது?
பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட பாம்பன் பாலத்தில் திடீரென பழுது ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.