அரசியல்

தலைவர்கள் கையெழுத்தாவது தமிழில் போடுங்கள்.. மோடி பரபரப்பு பேச்சு

தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதும் ஆங்கில கடிதத்தில் கையெழுத்தாவது தமிழில் இருக்கலாம் அல்லவா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

தலைவர்கள் கையெழுத்தாவது தமிழில் போடுங்கள்.. மோடி பரபரப்பு பேச்சு
நரேந்திர மோடி பரபரப்பு பேச்சு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 4) திறந்து வைத்தார். தொடர்ந்து, ராமேஸ்வரம்- தாம்பரம் ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.

பின்னர், நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், “புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாம்பன் பாலத்தை உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள். பாம்பன் பாலம் தான் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலம். பாம்பன் பாலப்பணிகள் பல ஆண்டுகள் நடந்தாலும் அதனை திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் அரசை விட மூன்று மடங்கு அதிக நிதியை பாஜக அரசு ஒதுக்கி இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு இத்தனை திட்டங்கள் கொண்டு வந்தாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்” என்று தமிழக அரசு மீது அவர் விமர்சனம் வைத்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதும் கடிதம் ஆங்கிலத்தில் இருக்கும். தமிழகத்தில் உள்ள தலைவர்களின் கையெழுத்து கூட ஆங்கிலத்தில் உள்ளது. கையெழுத்தாவது தமிழில் இருக்கலாம் அல்லவா? என்று கேள்வி எழுப்பினார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாம்பன் பால கட்டுமான பணியில் ஈடுபட்டவர் ஒரு குஜராத்தி, தற்போது புதிய பாம்பன் பாலத்தை ஒரு குஜராத்தியாகிய நான் திறந்து வைக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.