அரசியல்

விஜய்க்கும் - ஸ்டாலின் சாருக்கும் இடையே நடக்கும் போர் இது- சேலத்தில் விஜய் பேச்சு!

வரவிருக்கும் தேர்தல் ஸ்டாலின் சாருக்கும், எனக்கும் இடையே நடக்கும் போர் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கும் - ஸ்டாலின் சாருக்கும் இடையே நடக்கும் போர் இது- சேலத்தில் விஜய் பேச்சு!
TVK Vijay
வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார். சேலம் கூட்டத்தைத் தொடர்ந்து வேலூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திமுகவை அரசை கடுமையாக சாடினார்.

விஜய் சொன்ன குட்டி கதை

தனது உரையின் தொடக்கமாக ஒரு குட்டி கதையை விஜய் பகிர்ந்துகொண்டார். ஒரு ஊரில் யாராலும் அடக்க முடியாத முரட்டு ஜல்லிக்கட்டு காளை ஒன்று சீறிக்கொண்டு நிற்கிறது. அனுபவசாலிகள் பலரும் முயன்று தோற்றுப்போகிறார்கள். அப்போது அங்கு வரும் ஒரு சிறுவன், கிண்டல்களைக் காதில் வாங்காமல் ஸ்டைலாகக் காளையை நெருங்குகிறான். அவன் காளையை அடிக்காமல், அதன் பசியை உணர்ந்து கையில் இருந்த புல்லுக்கட்டைத் தருகிறான். பசி தீர்ந்த காளை அமைதியாகிறது.

கதையின் சுருக்கம்: "அந்த முரட்டு காளைதான் தமிழக அரசியல் களம். அதை அடக்க வந்த சிறுவன் நான் மட்டுமல்ல, நீங்கள் ஒவ்வொருவரும்தான். பசியால் (தேவையால்) வாடும் மக்களின் பிரச்னையைச் சரியாக உணர்ந்து தீர்ப்பதே தவெக-வின் கொள்கை" என்பதே அக்கதையின் சாரம்.

முதல்வர் ஸ்டாலின் மீது நேரடித் தாக்குதல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்மைக்கால உரைகளை விமர்சித்த விஜய், "ஸ்டாலின் சார், இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல் என்கிறார். நீங்கள் டெல்லியிலா போட்டியிடுகிறீர்கள்? எதற்கு மக்களைக் குழப்புகிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், "நீங்கள் எதற்கும் உதவாத 'பால் டப்பாவை' உருட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் இந்த தேர்தல் ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் எதிரான போர். இன்னும் நேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால், இது தமிழக மக்களுக்கும் திமுக-விற்கும் இடையிலான போர்; எனக்கும் (விஜய்) ஸ்டாலின் சாருக்கும் இடையிலான போர்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

மக்களுக்கான வாக்குறுதி

"எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல, அது 'விசில்' சின்னத்திற்கு மட்டுமே" என்று முழங்கிய விஜய், தவெக ஒரு தூய சக்தி என்றும், திமுக ஒரு தீய சக்தி என்றும் விமர்சித்தார். "தற்போது எதிர்க்கட்சியாக இருந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். நம் ஆட்சி அமைந்ததும், நான் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக வந்து உங்களைச் சந்திப்பேன்" என நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார்.