புதிய ரயில் பாலம்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- ராமேஸ்வரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் கடந்த 1914ம் ஆண்டு 2.2 கி.மீ தூரத்திற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டது.
இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால் ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி 2024 இறுதியில் நிறைவடைந்தது.இந்த நிலையில், பிரதமர் மோடியின் தேதிக்காக திறப்பு விழா தள்ளிப்போன நிலையில், இன்று பிரதமர் மோடியால் பாம்பன் புதிய பாலம் திறந்துவைக்கப்பட்டது.
பிரதமர் மோடி வருகை
முன்னதாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் மண்டபத்திற்கு வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைந்துள்ள மேடைக்கு வந்தார். அங்கு பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து பாம்பனில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த பிரதமர் மோடி, ராமேஸ்வரம்- தாம்பரம் ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். பிரதமர் மோடி ரயில் பாலத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இயக்கப்பட்டது.
கப்பல் சென்று வர வசதியாக 72.5 மீட்டர் நீளத்திற்கும், 650 டன் எடை கொண்டதாகவும் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடிக்கு கம்பராமாயணம் புத்தகத்தை வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார். இதேபோல் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக தலைவர்கள், ரயில்வே உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
முன்னதாக ஹெலிகாப்டரில் இருந்து ராமர் பாலத்தை பார்வையிட்டதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரை 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
பிரதமரின் வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்.4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குச்செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையையொட்டி, ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
கப்பல் சென்று வர வசதியாக 72.5 மீட்டர் நீளத்திற்கும், 650 டன் எடை கொண்டதாகவும் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.