கொஞ்சம் பொறாமையாக தான் உள்ளது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உதகையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலைகளின் அரசியான உதகைக்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை எழில் சூழ்ந்து உள்ளது.
உதகையில் உள்ளவர்களை பார்த்தால் கொஞ்சம் பொறாமையாக தான் உள்ளது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக ஊட்டியில் அரசு விழாவில் பங்கேற்பதில் மகிழ்கிறேன். நீலகிரியின் வளர்ச்சிக்கு திமுக தான் அடித்தளமிட்டது. திமுக ஆட்சியில் நீலகிரியின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில்...
திமுக ஆட்சியில் தான் உதகை ஏரி புதுப்பிப்பு, சுற்றுலா மாளிகை, படுகர் நலச்சங்க கட்டடம், முதுமலை சரணாலயம் விரிவாக்கம் ஆகியவை செய்யப்பட்டது. நான் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது நீலகிரிக்கு 3வது குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன். கூடலூர் பகுதியில் 10,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. குன்னூர் கோத்தகிரியில் அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு நன்மை செய்வதில் முதலாவது நபராக இருப்பவர்கள் நாங்கள் தான். 2019ல் நிலச்சரிவு ஏற்பட்டபோது இரண்டு நாட்கள் நான் இங்கேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருந்தேன். அன்றைய ஆட்சியாளர்கள் தூக்கத்தில் இருந்தபோது அவர்களை எழுப்பி நீலகிரிக்கு வர வைத்தது திமுக தான்.
மினி டைடல் பார்க்
தனித்துவமும், தலைமைத்துவமும் தான் திராவிட மாடல், அதனால் தான் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் என மத்திய அரசே கூறியுள்ளது. அழிவில் இருந்து வரையாடுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க் வர உள்ளது. வன விலங்கு தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது.
வாகனங்கள் செல்லாத இடங்களில் கூட மக்கள் தேடி மருத்துவம் திட்டம் சென்றுள்ளது. பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். நீலகிரி மாவட்டம், கூடலூரில் 300 வீடுகள் கொண்ட கலைஞர் நகர் அமைக்கப்படும். உதகைக்கு யார் வந்தாலும் உடலும் மனமும் தான் குளிர்ந்து போவார்கள், உங்களை குளிர்விக்க 6 புதிய அறிவிப்புகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு
உதகை மக்களை பார்த்து பொறாமை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக நீலகிரியில் மினி டைடல் பார்க் வர உள்ளது.