தமிழ்நாடு

மகளிர் உரிமை தொகையை முடக்க சதி? சட்டசபையில் கொந்தளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

"மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமை தொகையை முடக்க சதி? சட்டசபையில் கொந்தளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு!
Minister Thangam Thennarasu
தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான பதிலுரையை வழங்கினார். திராவிட மாடல் ஆட்சியானது சமூக நீதியையும், பெண்களின் பொருளாதார சுதந்திரத்தையும் முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

"சமூக நீதிக்கான போராட்டம் தொடரும்"

அமைச்சர் தங்கம் தென்னரசு உரையில், "மாவட்டந்தோறும் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. சமூக நீதிக்காக நமது திராவிட மாடல் அரசு என்றென்றும் தொடர்ந்து போராடும்.

முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற உடன் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பேருந்து தான். பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை அளிக்கும் வகையில் விடியல் பயணம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

"தமிழ்நாடே கொந்தளிக்கும்"

கடைக்கோடி மக்களின் நலன் காக்கும் ஆட்சியாக உள்ளது திராவிட மாடல் ஆட்சி. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடியாக விளங்குகிறது. நமது முதல்வர் ஆட்சியில் மகளிர் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கே நல்வழி காட்டும் நல்லாட்சி.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் அளிப்பதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். கொந்தளிப்பு உணர்வு இருக்கும்வரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்" என்று அவர் தெரிவித்தார்.