ஐபிஎல் மெகா ஏலம் 2025: எங்கு? எப்போது? - முழு விவரம் இதோ!
ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏராளமான இந்திய நட்சத்திர வீரர்கள் மீண்டும் மெகா ஏலத்திற்கு வந்துள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட், லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல்.ராகுல், கொல்கத்தா கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி, முகமது சிராஜ், இஷான் கிஷன் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்கவைத்துக் கொள்ளாமல் விடுவித்து உள்ளதால் இவர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.
2024 தொடரில் பங்கேற்ற 46 வீரர்களை அந்தந்த அணிகள் தக்கவைத்துக் கொண்டுள்ளன. அதிகப்பட்சமாக ஹென்ரிச் கிளாசனை [ரூ.23 கோடி] சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக விராட் கோலியை பெங்களூரு அணியும், நிகோலஸ் பூரனை லக்னோ அணியிம் தலா ரூ.21 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மும்பை அணி ஜஷ்பிரிட் பும்ரா, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோரை ரூ.75 கொடுத்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அணியும் அதிகப்பட்சமாக 120 கோடி ரூபாய் செலவழிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனியை அந்த அணி அன்கேப்ட் வீரராக தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் மெகா ஏலம் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில், 1,165 இந்திய வீரர்கள், 409 பிறநாட்டு வீரர்கள் 1574 வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?