இந்திய அணியில் துணை கேப்டன் நியமிக்கப்படாதது ஏன்?.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட்டார். இதனால் அவரே அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இப்போது அவரும் துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை.

Sep 9, 2024 - 18:25
Sep 9, 2024 - 18:25
 0
இந்திய அணியில் துணை கேப்டன் நியமிக்கப்படாதது ஏன்?.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!
Indian Cricket Team

டெல்லி: வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து முதல் டி20 போட்டி அக்டோபர் 7ம் தேதியும், 2வது டி20 போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 3வது டி20 போட்டி அக்டோபர் 13ம் தேதியும் நடைபெற உள்ளன. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

உலகின் நம்பர் 1 பவுலர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அணியில் இடம்பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் விபத்தில் படுகாயம் அடைந்து குணமான ரிஷப் பண்ட் சுமார் 20 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் என 4 ஸ்பின்னர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். 

மிக முக்கியமாக, இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளையில் துணை கேப்டனாக யாரும் அறிவிக்கப்படவில்லை. அணியில் மூத்த வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல் ஆகியோர் இருக்கும் நிலையில், ஏன் ஒருவரை கூட பிசிசிஐ துணை கேப்டனாக நியமனம் செய்யவில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட்டார். இதனால் அவரே அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இப்போது அவரும் துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை. துணை கேப்டன் நியமிக்கப்படாதது குறித்து பிசிசிஐ  எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இது தொடர்பாக வங்கதேச தொடருக்கு முன்பாக, செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேப்டன் ரோகித் சர்மாவும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள், ''இந்திய அணியில் ஒருவரை நிரந்தரமாக துணை கேப்டனாக போட்டு தேவைப்படும்பட்சத்தில் அவரை கேப்டனாக பிசிசிஐ நியமனம் செய்ய வேண்டும். இதேபோல் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் இருவரும் ஒரே மாதிரியான ஸ்பின்னர்கள். இவர்களுக்கு பதிலாக இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்'' என்று கூறுகின்றனர்.

பிசிசிஐ அறிவித்த 16 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் பின்வருமாறு:- 

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யஷ் தயாள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow