Ravindra Jedeja Play in Duleep Trophy 2024 : இந்தியாவில் ரஞ்சி கோப்பை, துலீப் டிராபி உள்ளிட்ட பல்வேறு முதல் தர கிரிக்கெட் போட்டித் தொடர்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான 'துலீப் டிராபி' தொடர் செப்டம்பர் 5ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஆந்திர மாநிலம் அனந்தபூர் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற உள்ளது.
துலீப் டிராபி தொடருக்கான அணி வீரர்களை பிசிசிஐ சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. மொத்தம் 4 அணிகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ அணிக்கு இந்திய அணியில் விளையாடும் சர்வதேச வீரர் சுப்மன் கில்லும், சி அணிக்கு ருத்ராஜ் கெய்க்வாட்டும், டி அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்திய அணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், அக்சர் படேல், சூர்யகுமார் யாதவ், முகமது சிராஜ், இஷான் கிஷன், ஜெய்ஸ்வால் என அனைத்து வீரர்களும் துலீப் டிராபி தொடரில் விளையாடுகிறனர். ரோகித் சர்மா, விராட் கோலி, ஐஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மட்டுமே இதில் விளையாடவில்லை.
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு அனைத்து இந்திய வீரர்களும் முதல் தர போட்டிகளில் விளையாடினார்கள். மேலும் முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வந்தனர். ஆனால் ஐபிஎல் தொடர் அறிமுகமானதும் நிலைமை தலைகீழாக மாறியது. ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதால், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் குறைந்தது.
கடந்த ஆண்டு இந்திய அணி வீரர்களான இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் டிமிக்கி கொடுத்தனர். இதனால் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ, அனைத்து இந்திய வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், ''துலீப் டிராபி தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி தவிர அனைவரும் விளையாடுகின்றனர். நான் எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் துலீப் டிராபியில் விளையாடுகின்றனர். ரவீந்திர ஜடேஜா காயம் அடைந்தபோது நான் அவரைக் கூப்பிட்டு, உள்நாட்டு போட்டிகளில் விளையாடச் சொன்னேன்.
இந்திய அணியில் எந்த வீரர் காயம் அடைந்தாலும், உள்ளூர் போட்டிகளில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்த பிறகுதான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடிவும். இந்த விஷயத்தில் நாங்கள் கண்டிப்புடன் உள்ளோம்'' என்றார். சில நாட்களுக்கு முன்பு பேசிய ஜெய்ஷா, ''ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடச் சொல்லி அவர்களின் பணிச் சுமையை அதிகரிக்க முடியாது. ஏனெனில் அவர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்நாட்டு போட்டிகளில் அந்த அணிகளின் முன்னணி வீரர்கள் யாரும் விளையாடுவதில்லை. ஆகவே நமது மூத்த வீரர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். அவர்களை வேலைக்காரர்கள் போல் நடத்தக்கூடாது'' என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.