சென்னையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது “மன்னர்கள் காலத்தில் அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தெலுங்கு பேசுபவர்கள் என்றும், அவர்கள் எப்படி தமிழர்களான பிராமணர்களை, தமிழர்கள் இல்லை என சொல்ல முடியும்” என்று பேசினார்.
கஸ்தூரியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்பபினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து நடிகை கஸ்தூரி மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், நான் குறிப்பிட்ட சிலரை பற்றி தான் கருத்து தெரிவித்தேன், ஒட்டுமொத்த தெலுங்கு சமூகம் பற்றி எதுவும் கூறவில்லை என தெரிவித்தார்.
தெலுங்கு பேசும் மக்களை புண்படுத்தும் நோக்கில் அவ்வாறு பேசவில்லை என்றும், நவம்பர் 3ஆம் தேதியன்று தெலுங்கு பேசும் மக்கள் குறித்து தான் கூறிய கருத்துக்களை அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன் என்றும் நடிகை கஸ்தூரி தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ள நடிகை கஸ்தூரி, ‘மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்ற என் பிடிவாதம் சகோதர மனப்பான்மையுடன் அறிவுறுத்தியதால் தளர்ந்தது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். தெலுங்கர் என்றோ தெலுங்கு மக்கள் குறித்தோ பேசவேயில்லை இல்லை இல்லை. தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.