இ.பி.எஸ் காரின் டயர் கூட தொடவில்லை.. அவருக்கு அருகதை கிடையாது - சேகர்பாபு காட்டம்
பெருமழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர்கூட தரையை தொடவில்லை என்றும் முதலமைச்சரை விமர்சிக்க ஜெயக்குமாருக்கு அருகதை கிடையாது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி மங்களபுரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நோய்தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து திரு.வி.க. நகர் பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள பகுதியில் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.கே.சேகர் பாபு, “தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் அரசு தயார் நிலையில் இருந்ததால், வெள்ளப் பாதிப்பை நிர்வாக திறமையோடு வெற்றிகொண்ட அரசாக உள்ளது. தமிழக அரசை நடுநிலையாளர்களும் பொதுமக்களும் பாராட்டுகின்றனர். ஒருசில தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற்றுகின்ற பணியை மேலும் விரைவு படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அனைத்து மாவட்ட அமைச்சர்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் மழை வெள்ளப் பணிகளை செய்ய கூறியுள்ளார். இங்கிருந்து 325 hp திறன் கொண்ட மோட்டார் மூலம் தண்ணீர் பக்கிம் கால்வாய்வாக்கு வெளியேற்றப்படுகிறது.
இதற்கு நிரந்தர தீர்வாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட பெய்த பெருமழையின் பொழுது, முதலமைச்சர் ஆய்வு செய்தார். சுமார் 19 கோடி ரூபாய் செலவில் இந்த மழை நின்றவுடன் பணிகள் துவக்கப்பட்டு அடுத்த பருவமழைக்கு தண்ணீர் தேங்காத சூழ்நிலையை நிச்சயம் ஏற்படுத்தி தருவோம். நிரந்தர தீர்வு அடுத்த பருவ மழைக்குள் ஏற்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய சேகர்பாபு, “எங்கெல்லாம் அவய குரல் கேட்கிறதோ, அங்கெல்லாம் ஆதரவு குரல் நீட்ட முதல்வராக முதலமைச்சர் களத்தில் உள்ளார். 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் வற்றிவிடும். கடந்த காலங்களில் 13 சென்டிமீட்டர் என்ற அளவிற்கு மழை பெய்தாலும் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் வெளியேறாத நிலைமை இருந்தது. தற்பொழுது அந்த நிலைமை முற்றிலமாக மாறி உள்ளது.
முக்கிய சாலைகள் முழுவதுமாக பயன்பாட்டில் உள்ளது. எங்கும் போக்குவரத்திற்கு தடை இல்லை. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, மூன்று வேலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.
தண்ணீர் தேங்கும் இடத்திற்கு முதலமைச்சரை அழைத்து செல்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கூறியதற்கு பதிலளித்த அமைச்சர், ‘டெல்டா பகுதிகளின் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பாதிப்பின் பொழுது வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. எந்தவிதமான மழை நிவாரண பணிக்கும் செல்லாதவர்.
இரண்டு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமியின் காரின் டயர் கூட தரையை தொடவில்லை. மழை வருவதற்கு முன்பே தனது காலை, நிலத்தில் பதிக்கக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப்பதற்கு, ஜெயக்குமாருக்கு எந்த அருகதையும் கிடையாது” என்றார்.
What's Your Reaction?