பாரதியின் நூல்களின் முழு தொகுப்புகள்.. இன்று வெளியிடுகிறார் பிரதமர் ..!
மகாகவி பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு , அவரின் முழுமையானப் படைப்புகளின் நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்தநாள் விழா இன்று (டிச.11) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பாரதியின் முழுமையானப் படைப்புகளின் நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.
ஒவ்வொரு வருடமும் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை தமிழக அரசு சிறப்பாக கொண்டாடி வரும் சூழலில், இந்த வருடம், மத்திய அரசு பாரதியாரின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், பாரதியாரின் 143-வது பிறந்தநாளான இன்று, காலவரிசையில் தொகுக்கப்பட்ட மகாகவியின் படைப்புகளை தொகுப்பு நூல்களாக பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
பாரதியாரின் முழு தொகுப்பு வெளியிடும் நிகழ்ச்சி மத்திய கலாச்சாரத் துறையின் கீழான சாகித்ய அகாடமி சார்பில் பிரதமரின் அரசு இல்லத்தில் இன்று நண்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "சிறந்த தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை இன்று பிற்பகல் 1 மணியளவில் தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடி வெளியிடுகிறார். சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை ஊட்டியது. இந்திய கலாசாரம் மற்றும் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தின் சாரத்தை வெகுஜன மக்கள் தொடர்புபடுத்தக்கூடிய மொழியில் மக்களிடம் அவர் எடுத்துச் சென்றார்.
முழுக்க தமிழில் வெளியிடப்படும் பாரதியாரின் முழுமையான படைப்புகளின் 23 தொகுதிகள் சீனி விஸ்வநாதன் தொகுத்துள்ளார். இந்த தொகுப்பினை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட உள்ளது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கங்கள் போன்றவை அடக்கம்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி மத்திய கலாச்சாரத் துறையின் கீழான சாகித்ய அகாடமி சார்பில் நடைபெறுகிறது.
மேலும், இவ்விழாவில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவாத், நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமச்சர் டாக்டர்.எல்.முருகன் மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
What's Your Reaction?