ஒரு காலத்துல பாட்ஷா! இப்போ மாணிக்கம்.. ரஜினியின் அரசியல் பிரவேசம்..
அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு வயிற்றில் புளி கரைத்தவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். "சொல்லுங்க.. சொல்லுங்க..சொல்லுங்க..நீங்க யாரு.. பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?" என்ற வசனத்திற்கேற்ப, தற்போது மாணிக்கமாக இருக்கும் பாட்ஷா அரசியலில் என்ட்ரி கொடுக்காமல் எக்சிட் ஆனதும் ஒரு வரலாறு தான்.
இப்போது இருக்கும் பொடிசுகள், ரஜினியின் அரசியல் பேச்சுகளையும், சந்தித்த நெருக்கடிகளையும், தனக்கு இருந்த ரசிகர் பட்டாளத்தை பற்றியும் அறிந்திட வாய்ப்பில்லை. ஆம், ரஜினியின் அரசியல் வருகை பேச்சு இணையதளம் செழிப்பாக இருந்த 2k காலத்தில் உருவானதல்ல. 1991ம் ஆண்டிலேயே ரஜினியின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் எழத்தொடங்கிவிட்டது. 1991ல் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்த பிறகு திரைப்பட நகருக்கு ‘ஜெ.ஜெ.நகர்’ என பெயர் சூட்டப்பட்டது. இதனால் திரையுலகினர் அதிருப்தியில் இருந்ததாக பேசப்பட்டது. இதனையடுத்து, சில மாதங்கள் கழித்து சிவாஜிக்கு ’செவாலியே விருது’ வழங்கும் விழா நடந்தது. அந்நிகழ்வில் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல், ”நீங்கள் திறந்து வைத்த ஃபிலிம் சிட்டிக்கு சிவாஜி பெயரை வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதை செய்யவில்லை. அவரை மதிக்கவில்லை. அது தவறு” என பட்டென்று போட்டு உடைத்தார் ரஜினி.
இதனால், ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அப்போதிலிருந்தே தனது படங்களின் மூலம் அரசியல் பேச தொட்டங்கினார் ரஜினி. குறிப்பாக 1992ம் ஆண்டில் வெளியான மன்னன் திரைப்படத்தில், “எவ்வளவு சென்னாலும் கேட்காம தேர்தல்ல நிக்கணும், போட்டியில நிக்கணும் அப்பதான் நல்ல தலைவரா உருவாக முடியும். நின்னுடு. “ என்ற தொழிற்சங்க தேர்தலில் நிற்பது தொடர்பான ஒரு வசனத்தை பேசியிருந்தார் ரஜினி. இதனால் தலைவர் அரசியலுக்கு வரப்போகிறார் என அவரது ரசிகர்கள் அப்போதே மிகுந்த ஆரவாரம் காட்டினர்.
இதனையடுத்து, 1992ம் ஆண்டில் ரஜினியின் அண்ணாமலை படத்தில்,” என் பாட்டுக்கு என் வேலைய செஞ்சுகிட்டு சிவனேனு போயிட்டிருக்கேன். என்னை வம்புக்கு இழுக்காதீங்க. வம்புக்கிழுத்த நான் சொன்னதையும் செய்வேன். சொல்லாததையும் செய்வேன்“, என பேசிய வசனங்களில் எல்லாம் அரசியல் நெடி தூக்கலாக இருந்தது.
இதையடுத்து, 1995ம் ஆண்டில் பாட்ஷா படத்தின் வெற்றி விழா நடந்தது, அப்போது ”தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவிவிட்டது” என பேசினார் ரஜினி. இதனால் அதே மேடையை பகிர்ந்த அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் பதவியை பறித்து தனது கோபத்தை காட்டினார் ஜெயலலிதா. இதனால் இருவருக்குள்ளும் இருந்த மோதல் கொளுந்துவிட்டு எரிந்தது என பலரும் கூறுவர்.
இவ்வளவு நாள் படங்கள் மூலம் அரசியல் பேசி வந்த ரஜினி, 1996ம் ஆண்டில் “ஜெயலலிதா மறுபடி ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது” என கூறியிருந்தார். இவருடைய இந்த பேச்சால், அந்த தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தோற்றுவிட்டார். அப்போது கூட்டணியில் இருந்த திமுகவும், தமாகாவும் தேர்தலில் வெற்றிபெற்றது. இந்த ஒரு நிகழ்வே ரஜினிக்கு இருந்த ரசிகர் பலத்தை பற்றி பட்டித் தொட்டி எங்கும் பேசவைத்தது.
இந்நிகழ்வுக்கு பின், இன்னும் ஹெவியாக தனது படங்களில் அரசியல் பேசத்தொடங்கினார் ரஜினி. அருணாச்சலம் படத்தில் இடம்பெற்றிருந்த ’சிங்கமொன்று புறப்பட்டதே’ பாடல், படையப்பாவில் இடம்பெற்றிருந்த வசனங்கள், தானே வசனங்கள் எழுதி, நடித்த ’பாபா’ படத்தில் முன்வைத்த ஆன்மீக அரசியல் கான்செப்ட் ஆகியவை ரஜினியின் அரசியல் பாதைக்கு சிவப்பு கம்பளம் விரித்தது.
இதற்கிடையில் 1998ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இஸ்லாமியர்களுக்கு தொடர்பில்லை என கூறி ஆதரவாக குரல் கொடுத்தது, காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து, நதி நீர் ஒருங்கிணைப்புக்காக 1 கோடி ரூபாய் கொடுத்தது என கள அரசியலிலும் ஈடுபட்டார் ரஜினி.
2002ம் அண்டில் வெளியான பாபா படத்தில் சிகரெட் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் அப்படத்தை வெளியிடக்கூடாது என போராட்டம் நடத்தியது பாமக. இதனால் பாமகவுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. எனவே 1996ல் நடந்ததை போல 2004ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக தோல்வியை தழுவும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தான் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது பாமக. இந்த நொடியில் தான் ரஜினியின் பாட்ச்சா இனி பலிக்காது என பலரும் பேசத்தொடங்கினர்.
பிறகு 2008ம் ஆண்டில் ஒகேனக்கல் திட்டத்திற்கு கன்னடர்கள் தெரிவித்த எதிர்ப்புக்கு பதிலடி கொடுத்தது, ஈழ படுகொலையை கண்டித்து இலங்கை அரசை சாடியது, 2012ம் ஆண்டில் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என கூறியது, 2014ம் ஆண்டில் தமிழகம் வந்த மோடியை சந்தித்தது என அரசியல் நோக்கி நகர்ந்தார் ரஜினி.
ஒருவழியாக ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார். ஆனால், அறிவிப்போடு நின்றுபோனது ரஜினியின் அரசியல் பிரவேசம். இதனால் தட்கல் ரிசர்வேஷனில் வெயிட்டிங் லிஸ்டில் காத்திருப்பதை போல மீண்டும் ரஜினியின் ரசிகர்கள் காத்திருக்க தொடங்கினார்கள். இப்போது வருவார், அப்போது வருவார், கபாலிக்கு முன் வருவார், காலா வந்தால் வந்துவிடுவார், பேட்ட வந்தால்.. தர்பார் வந்தால் என காத்திருந்து காத்திருந்த காலத்தை கழித்தனர் ரஜினி ரசிகர்கள்.
நன்றாக சென்றுக்கொண்டிருந்த ரஜினியின் சமூக செயற்பாடுகளில் speedbreaker வந்தது போல, 2018ம் ஆண்டில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த பிறகு, ”ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு காரணம் சமூக விரோதிகள் தான்” என கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார் ரஜினி.
மீண்டும் 2020ம் ஆண்டில் கட்சி தொடங்கப்போவதாக நம்பிக்கை அளித்திருந்த ரஜினி, உடல்நல பிரச்சையால் ”கட்சி தொடங்க முடியவில்லை மன்னியுங்கள்” என கூறி ரசிகள் தலையில் இடியை இறக்கினார் ரஜினி. இதனால் இவரது ரசிகர்களும் இவர் மீது நம்பிக்கை இழக்க, “ தலைவா நீ சினிமா மட்டும் பண்ணு. அதுவே எங்களுக்கு போதும்” என மீம்சுகளை இணையத்தில் அள்ளிவீசினர்.
ஆரம்பக்காலத்தில் ஆவேசமாக அரசியல் பேசியவர், 2024ம் ஆண்டில் அரசியல் கேள்விகளுக்கு கூட பதிலளிக்கமாட்டேன் என 'NO" சொல்லும் நிலைக்கு வந்துவிட்டார். ஆனால், சமீபத்தில் திமுக நிகழ்வில் பங்கேற்று, “பல்லு போன அரசியல் வாதிகள்” என பேசியது, ஜானகி ராமச்சந்திரனுக்கு புகழாரம் சூட்டியது, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இவரை சந்தித்தது என பல விஷயங்களால் அரசியல் வட்டரத்தில் ரஜினியின் பெயர் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.
28 வருடங்களாக சூப்பர்ஸ்டாரின் அரசியல் அறிவிப்புக்காக கால் கடுக்க காத்திருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருந்தாலும், இன்னமும் 1996லேயே ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால், இந்நேரம் முதலமைச்சர் பதவியை நிச்சயம் அலங்கரித்திருப்பார் என்று சொல்லாதவர்களே இல்லை என்றே கூறலாம்.
What's Your Reaction?