பசியும் பட்டினியும்... 2050ல் இந்தியாவின் நிலை.. வெளியான அதிர்ச்சித் தகவல்!

2050ம் ஆண்டில் இந்தியாவில் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 230 கோடியாக உயரும் என யூனிசெஃப் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Nov 30, 2024 - 00:17
Nov 30, 2024 - 00:57
 0
பசியும் பட்டினியும்... 2050ல் இந்தியாவின் நிலை.. வெளியான அதிர்ச்சித் தகவல்!
பசியும் பட்டினியும்... 2050ல் இந்தியாவின் நிலை இதுதான்.. வெளியான அதிர்ச்சித் தகவல்!

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா முதலிடத்தில் இருந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக, சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தில் நீடித்து வருகிறது. நடப்பாண்டின் நிலவரப்படி இந்தியாவில் 140.91 கோடி மக்களும், இரண்டாம் இடத்திலிருக்கும் சீனாவில் 140.79 கோடி மக்களும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், அண்மையில் யூனிசெஃப் ஒரு திடுக்கிடும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இன்றிலிருந்து 25 ஆண்டுகள் கழித்து, அதாவது, 2050ம் ஆண்டில் இந்தியாவில் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 230 கோடியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இது இந்தியாவை பொருத்தவரை தற்போதைய எண்ணிக்கையிலிருந்து சுமார் 10 கோடியே 60 லட்சம் குறைவு தான். ஆனால், 2050ல் உலகளவில் உள்ள குழந்தைகள் எண்ணிக்கையில், 15 சதவீதத்தை இந்தியா கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 நாடுகள்தான் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதிக குழந்தைகள் எண்ணிக்கையை 2050ல் கொண்டிருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல் காணப்படுகிறது. 

உலகளவில் பருவநிலை மாற்றம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், 2050ம் ஆண்டுக்குள் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் மிகவும் குறைவாகவே இருக்கும் என ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இனி வரும் காலங்களில் பிறக்கப்போகும் குழந்தைகள் மோசமான காலநிலை, சுகாதாரமற்ற காற்று, தண்ணீர், அதீத வெப்பம், வெள்ளம், பஞ்சம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பெரிதும் பாதிக்கப்படவுள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும் புவி வெப்பமடைதல் காரணமாகவும் தற்போதைய காலத்திலேயே, இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள குழந்தைகள் சத்தான உணவு, சுகாதாரமான காற்று மற்றும் தண்ணீரின்றி பசி - பட்டினியால் வாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஐநா அமைப்பின் உலகக் குழந்தைகளின் நிலை 2024 அறிக்கையின்படி, 2050ம் ஆண்டிற்குள் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்வுக்கு ஏற்ற கால சூழலை உருவாக்குவதற்காக “The Future of Children in a Changing World” என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான முன்னெடுப்புகள் தற்போதிலிருந்தே எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், மக்களின் வளமான வாழ்விற்காகவும் மிஷன் LIFE, பருவநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டம், சுவச் பாராத் மிஷன், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. 

இதைத்தவிர யூனிசெஃப் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் பருவநிலை மாற்றம் குழந்தைகளின் மனநிலையை எவ்வகையில் பாதிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “ஒரு சராசரி வயது மிகுந்த நபரோடு ஒப்பிடுகையில் வளரும் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளை, நுரையீரல் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு ஆகியவை மோசமான பருவநிலை மற்றும் காற்று, தண்ணீர் மாசுவினால் எளிதில் பாதிப்புக்குள்ளாகிறது. மேலும் புவி வெப்பமடைதல் காரணமாக அதிர்ச்சி, பதட்டம், சோர்வு உள்ளிட்ட மனநிலை பிரச்சனைகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்” எனத் தெர்விக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யூனிசெஃப்பின் இந்த அறிக்கையால், குழந்தை பிறப்பு குறித்த பயம் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் சில குடும்பங்களில் அபத்தமாக கருதப்படும் ஐவிஎஃப் சிகிச்சை மற்றும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் விதமும், தத்தெடுப்பதும் இனி வரும் காலங்களில் சகஜமாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow