உலகம்

மியான்மர் நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.. தடுமாறும் அரசு

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மியான்மர் நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு.. தடுமாறும் அரசு
மியான்மர் நிலநடுக்கம்

மியான்மரில் நேற்று (மார்ச் 29)  காலை 11.50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில்  7.7 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கமானது அண்டை மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கிய நிலையில் மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். அதுமட்டுமல்லாமல், வீடுகள் குலுங்கி ஜன்னல் கண்ணாடிகளில் கீறல் விழுந்துள்ள வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது. 

மேலும், பாங்காக்கில் நிலநடுக்கத்தின் போது கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாகவும் 177 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமான நிலையில் தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

மியான்மர் இராணுவ ஜெனரல் மின் ஆங் ஹலேங் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நிலநடுக்கத்தால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்பதால் பிற நாடுகள் எங்களுக்கு உதவ முன்வரலாம்” என்று தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம்

மியான்மரில் நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. நாட்டின் மிக முக்கியமான மா சோ யனே (Ma Soe Yane)  மடாலயம்,  அரசு குடியிருப்புகள் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. 

பாலங்கள், அணைகளில் கீறல்கள் ஏற்பட்டுள்ளது.  மாண்டலே -மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கோனை (Yangon) இணைக்கும் நெடுஞ்சாலைகளும் சேதமடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தாய்லாந்திலும் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு உணவு, போர்வைகள், மருந்து, ஜெனரேட்டர்கள் என 15 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.