உலகம்

"பொட்டேட்டோ" எனக்கூறி கிண்டல்: அயர்லாந்து பெண்ணுக்கு ரூ. 29 லட்சம் இழப்பீடு!

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை அவரது மேலதிகாரி இனம் சார்ந்த சொற்களைக் கூறித் துன்புறுத்தியதற்காக, லண்டன் நீதிமன்றம் அவருக்கு ரூ. 29 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.


Irish woman
இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள ஒரு சிவில் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பெர்னார்டெட் ஹேய்ஸ் என்பவர் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். அங்கு அவரது மேலதிகாரியான மிக் அட்கின்ஸ் என்பவர், ஹேய்ஸின் அயர்லாந்து பின்னணியைக் கிண்டல் செய்யும் விதமாகத் தொடர்ந்து இனவெறிச் சொற்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். இது தொடர்பான வழக்கில் தற்போது அந்தப் பெண்ணுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்துள்ளது.

இனவெறிச் சொற்களால் சித்திரவதை

ஹேய்ஸின் கருத்துக்களில் உடன்பாடு இல்லாதபோதெல்லாம், அட்கின்ஸ் அவரைப் பார்த்து அயர்லாந்து உச்சரிப்பிலேயே "பொட்டேட்டோ" (உருளைக்கிழங்கு) என்று கத்துவாராம். அதுமட்டுமின்றி, அயர்லாந்து மக்களை இழிவுபடுத்தும் விதமான "பேடி" (Paddy) மற்றும் "ஸ்டுபிட் பேடி" போன்ற சொற்களைப் பயன்படுத்தியும் அவர் மற்றவர்கள் முன்னிலையில் ஹேய்ஸை அவமானப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மனவேதனை

இந்தச் சம்பவங்கள் குறித்து நீதிமன்றத்தில் பேசிய ஹேய்ஸ், "ஒவ்வொரு முறை அலுவலகத்திற்குள் நுழையும்போதும் எனக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவது போன்ற உணர்வு உண்டாகும். அந்த மேலதிகாரியின் பேச்சு எனது சுயமரியாதையை முற்றிலும் சிதைத்துவிட்டது. பயம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு காரணமாக என்னால் அவரைத் தட்டிக் கேட்க முடியவில்லை. பணத்தேவை இருந்ததால் வேலையை விட்டுப் போகவும் முடியாமல் ஆறு மாதங்கள் நரக வேதனையை அனுபவித்தேன்" என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பக்லி, அட்கின்ஸின் செயல் திட்டமிட்ட இனவெறித் தாக்குதல் என்று உறுதி செய்தார். "பொட்டேட்டோ", "பேடி" போன்ற சொற்கள் அயர்லாந்து மக்களின் பாரம்பரியத்தோடு தொடர்புபடுத்தி அவர்களைச் சிறுமைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது ஒரு ஊழியருக்குப் பணிபுரியும் இடத்தில் மிக மோசமான மற்றும் அவமானகரமான சூழலை உருவாக்கியுள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட ஹேய்ஸுக்கு 29 லட்சம் ரூபாயை (23,526 பவுண்டுகள்) இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.