சினிமா

48 மணி நேரத்தில் சாதனை படைத்த ‘எம்புரான்’.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘எம்புரான்’ திரைப்படம் 48 மணி நேரத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

48 மணி நேரத்தில் சாதனை படைத்த ‘எம்புரான்’.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எம்புரான்

கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘லூசிபர்’. இந்த படத்தின் மூலம் நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானார். அரசியல் பின்னணியில் உருவான இப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இதையடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் மோகன்லால்,  பிரித்விராஜ், மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ஆசிர்வாத் சினிமாஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார்.

 ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ’எம்புரான்’ திரைப்படம் கடந்த 27-ஆம் தேதி உலகம் முழுவதும் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

100 கோடி சாதனை

இந்நிலையில், வெளியான 48 மணிநேரத்தில் இப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, ‘எம்புரான்’ திரைப்படம் 48 மணி நேரத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் ‘எம்புரான்’ 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மலையாள சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த படமாக பிரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ இருந்தது. தற்போது இந்த சாதனையை ‘எம்புரான்’ திரைப்படம் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.