உலகம்

உலக நாடுகளுக்கு ஆப்பு வைத்த டிரம்ப்.. எந்த நாட்டிற்கு எவ்வளவு வரி?

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரியை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

உலக நாடுகளுக்கு ஆப்பு வைத்த டிரம்ப்.. எந்த நாட்டிற்கு எவ்வளவு வரி?
அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தங்கள் நாடு மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த வரி விதிக்கும் நடவடிக்கையானது ஏப்ரல் 2-ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார். 

பரஸ்பர விதி

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது வெளியிட்டார். அதன்படி, அமெரிக்கா, இந்தியா மீது 26 சதவிகிதம் வரியை விதித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், “அமெரிக்கா மீது மற்ற நாடுகள் விதிக்கும் வரியில் பாதியை அவர்கள் நாடு மீது அமெரிக்கா விதித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா அவர்கள் மீது கருணை காட்டியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அமெரிக்கா வந்திருந்தார்.

அவர் எனது மிகச் சிறந்த நண்பர். நான் அவரிடம் கூறினேன் நீங்கள் என் நண்பராக இருந்தாலும் அமெரிக்காவை நீங்கள் சரியாக நடத்தவில்லை என்று. இந்தியா, அமெரிக்கா மீது 52 சதவிகிதம் வரி விதிக்கிறது. அதில் பாதி வரியான 26 சதவிகிதத்தை அமெரிக்கா, இந்தியா மீது விதித்துள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து,  “பல ஆண்டுகளாக மற்ற நாடுகள் அமெரிக்காவின் கொள்கைகளை பயன்படுத்திக் கொண்டு நம்மை கொள்ளையடித்துள்ளனர். ஏப்ரல் 2-ஆம் தேதி அமெரிக்காவின் விடுதலை நாளாக அறியப்படும். அமெரிக்கா தங்கள் தொழில்துறையை மீட்டெடுத்த நாள். Reciprocal வரி என்பது நமக்கு அவர்கள் என்ன செய்தார்களோ அதை திருப்பி நாம் அவர்களுக்கு செய்கிறோம்.

இதன் மூலம் வேலைவாய்ப்பு, தொழில்துறை, சிறு குறு தொழில்களை மீட்டெடுப்போம். அமெரிக்காவை வளமான நாடாக மாற்றுவோம். வேலை வாய்ப்புகள் அமெரிக்காவை தேடி வரும்” என்று தெரிவித்தார். 

எந்த நாடுகள் மீது எவ்வளவு வரி

சீனா- 34 %

ஐரோப்பிய ஒன்றியம் -20%

வியட்நாம் -90%

ஜப்பான் -24%

இந்தியா  -26%

இங்கிலாந்து- 10%

பிரேஸில் -10%

இலங்கை- 88% என பல நாடுகளுக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. 10 சதவிகித பரஸ்பர விதி வரும் 5-ஆம் தேதியில் இருந்தும் அதற்கு மேல் விதிக்கப்பட்டுள்ள வரி வரும் 9-ஆம் தேதியிலிருந்தும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.