உலகம்

AI-யிடம் ஆலோசனை கேட்ட மருத்துவர்.. அதிர்ச்சியில் உறைந்த பெண்

ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவர் மருத்துவ ஆலோசனைக்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திய சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

AI-யிடம் ஆலோசனை கேட்ட மருத்துவர்.. அதிர்ச்சியில் உறைந்த பெண்
ஏஐ-யிடம் மருத்துவ ஆலோசனை கேட்ட மருத்துவரால் அதிர்ச்சி

AI தொழில்நுட்பத்தின் வருகையால் அனைத்துத் துறைகளிலும் பெரும் புரட்சி ஏற்பட்டு வருகிறது. AI தொழில்நுட்பம் நமது வேலைப்பளுவை பன்மடங்கு குறைத்துள்ளது எனலாம். உதாரணமாக, வரலாற்றில் ஏதாவது சந்தேகம் இருந்தால்  சாட் ஜிபிடி (Chat Gpt) போன்ற ஏஐ தொழில்நுட்பத்திடம் நாம் சாட் செய்தால் போதும். அவையை அனைத்து தரவுகளையும் எடுத்துக் கொடுத்துவிடும்.

அதுமட்டுமல்லாமல், ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் சுலபமாக செய்து தருகின்றது. ஆசிரியர்களே தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் தெரிந்து கொள்கிறார்கள். இப்படி எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் AI தொழில் நுட்பம் தற்போது மருத்துவ துறையிலும் ஆதிக்கம் செலுத்துவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திய மருத்துவர்

ஆஸ்திரேலியா பெர்த் (Perth) நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மருத்துவ பரிசோதனை முடிவுகளை எடுத்துக் கொண்டு மருத்துவர் ஒருவரிடம் சென்றுள்ளார். அந்த மருத்துவர் அப்பெண்ணின் பரிசோதனை முடிவுகளை ஏஐ ஆப்பில் பதிவு செய்து ஆலோசனை வழங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் இதுகுறித்து ரெடிட் (Reddit) வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அதில், “ மருத்துவர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சோம்பேறித் தனமான, செய்யும் தொழிலுக்கு எதிரான ஒரு செயலாகும். இதற்கு முன்பு இதுபோன்ற திறமையற்ற மருத்துவர் முன்பு இருந்தது போன்று நான் உணர்ந்ததில்லை. மருத்துவர்கள் சில நேரங்களில் கூகுள் மற்றும் மருத்துவ தளங்களில் ஆலோசனை பெறுவார்கள்.

ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆலோசனை பெறுவது எல்லை மீறிய செயலாகும். நான் மீண்டும் அவரிடம் பரிசோதனைக்கு செல்வேன் என்று தோன்றவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண் புகார்

இச்சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய சுகாதாரப் பயிற்சியாளர் ஒழுங்குமுறை நிறுவனத்திடம் (Australian Health Practitioner) புகாரளித்த அப்பெண், சுகாதார மற்றும் ஊனமுற்றோர் சேவைகள் புகார் (Health and Disability Service Complaint Office) அலுவலகத்திலும் இச்சம்பவம் குறித்து புகார் தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பதிவு சமூக வலைதளத்தில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் நெட்டிசன்கள் சிலர் ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஆதரவாகவும் பலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.