சதுரகிரி கோயில் பக்தர்கள் ஏமாற்றம்... முறையான தகவல் இல்லை என குற்றச்சாட்டு!
கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது குறித்து சரியான தகவல் வெளியிடவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயில்லானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று (நவ. 28) முதல் டிசம்பர் 1ம் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரி கோயிலுக்கு சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் ஏற்கனவே அனுமதி வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையின் காரணமாக அனுமதிக்கப்பட்ட நான்கு நாட்களும் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மதுரை மாவட்ட காவல்துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று (நவ. 28) கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு மழை இல்லாததன் காரணமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இதனால் வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பக்தர்கள் இன்று அதிகாலை முதலே மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அனுமதி சம்பந்தமான தகவல் குளறுபடியின் காரணமாக இன்று பிரதோஷத்திற்கு மிகவும் குறைவான அளவு பக்தர்களே சதுரகிரி கோயிலுக்கு வருகை தந்தனர்.
இனி வரும் காலங்களில் காவல்துறை, வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் இணைந்து பக்தர்களை சிரமத்திற்கு ஆளாக்குவதை தவிர்த்துவிட்டு முறையான மற்றும் தெளிவான தகவலை தெரிவிக்க வேண்டும் எனவும், இரண்டு நாட்களுக்கு முன்கூட்டியே தடை குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?